ஊட்டி : தாவரவியல் பூங்காவில் உள்ள மரங்களின் அடியில் புதிய புற்கள் பதிக்கும் பணி துவங்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது சீசன் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசனாகவும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாவது சீசனும் அனுசரிக்கப்படுகிறது.
முதல் சீசனின் போது, பல்வேறு கண்காட்சிகள் மற்றும் விழாக்கள் நடத்தப்படுகிறது. இதனை காண வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம்.
அதேபோல், இரண்டாம் சீசனின் போதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால், இவ்விரு சீசன் சமயங்களிலும் பூங்காக்களை தோட்டக்கலைத்துறையினர் தயார் செய்வது வழக்கம்.
முதல் சீசனின் போது மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது. இம்முறை மலர் கண்காட்சி கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. மலர் கண்காட்சி காண ஏராளமான ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வந்தனர். மேலும், இம்முறை மே மாதம் தொடர்ந்து மழை பெய்த நிலையில், பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, சுற்றுலா பயணிகள் மழையிலேயே பூங்காவில் உள்ள புல் மைதானங்களில் நடந்து சென்ற நிலையில், புல்வெளிகள் பாதிக்கப்பட்டன. இந்த இடங்களில் தற்போது புதிய புற்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, புல் மைதானங்களில் உள்ள மரங்களின் அடியில் இருந்த புற்கள் முழுமையாக சேதம் அடைந்த நிலையில், தற்போது புதிய புற்கள் பதிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் ஓரிரு நாட்கள் மேற்கொள்ளப்படும் என ஊழியர்கள் தெரவித்தனர்.
தற்போது, ஊட்டி தாவரவியல் பூங்கா இரண்டாம் சீசனுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பூங்காவில் நடவு பணிகளுக்காக பாத்திகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புல் மைதானங்கள் சீரமைப்பு பணிகளும் மும்முரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post தாவரவியல் பூங்காவில் மரங்களின் அடியில் புற்கள் பதிக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.