புதுடெல்லி,
2025-2026-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மக்களவைக்கு ரூ.903 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த ஒதுக்கீடான ரூ.903 கோடியில் ரூ.558 கோடி மக்களவை செயலகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் சன்சத் தொலைக்காட்சிக்கான மானியங்களும் அடங்கும். மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரின் சம்பளம் மற்றும் படிகளுக்காக ரூ.1.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல பட்ஜெட்டில் மாநிலங்களவைக்கு ரூ.413 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை தலைவர் மற்றும் துணைத்தலைவரின் சம்பளம் மற்றும் படிகளுக்காக ரூ.2.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அவரது செயலகத்தின் சம்பளம் மற்றும் படிகளுக்காக ரூ.3 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ரூ.98.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் மக்களவைக்கு ஒதுக்கப்பட்ட தொகையானது மாநிலங்களவைக்கு ஒதுக்கப்பட்டதை விட 2 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.