
புதுடெல்லி,
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை தொடங்க உள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு, மணிப்பூர் வன்முறை மற்றும் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்தை இந்தியா கையாண்ட விதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிக்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. இதனால் அவை நடவடிக்கைகளில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
அதேபோல் மத்திய அரசை பொருத்தவரை மானியக் கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுதல், பட்ஜெட் நடைமுறைகளை நிறைவு செய்தல், மணிப்பூர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுதல் மற்றும் வக்ஃப் திருத்த மசோதாவை நிறைவேற்றுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான நாடாளுமன்ற ஒப்புதலை கோரும் சட்டப்பூர்வ தீர்மானத்தை உள்துறை மந்திரி அமித் ஷா முன்மொழிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிப்பூர் மாநிலத்திற்கான பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதை தொடர்ந்து அமெரிக்க பொருட்கள் மீதுதான வரியை குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இந்த வரி குறைப்பு தொடர்பாக காங்கிரஸ் பாராளுமன்றத்தில் பிரச்சனையை கிளப்பும்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போதுதொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு, தமிழகத்துக்காக நிதிப்பகிர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கிளப்ப தி.மு.க. எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனர்.