மூணாறு: மூணாறு அருகே சுற்றித்திரியும் படையப்பா காட்டுயானையை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், மூணாறு மக்களிடையே படையப்பா காட்டு யானை மிகவும் பிரபலமானது. இந்த யானை சமீப காலங்களாக உணவு தேடி குடியிருப்பு பகுதி மற்றும் சாலையோரங்களில் சுற்றித் திரிவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும் எஸ்டேட் பகுதிகளில் விவசாய தோட்டங்களில் உள்ள பயிர்களை அழித்து நாசம் செய்து வருகிறது. படையப்பா யானைக்கு தற்போது, மதம் பிடித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதை உணர்த்தும் வகையில் யானையின் இடது காதுக்கு அருகில் சுரப்பிகளில் மத நீர் வழிவதால், யானை மிகவும் ஆக்ரோஷமாகவும், ஆபத்தாகவும் மாறும் நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளனர். தற்போது படையப்பா யானை பெரியவாரை மற்றும் கன்னிமலை எஸ்டேட் பகுதிகளில் சுற்றி திரிகிறது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் மேற்கொண்டு அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், படையப்பா யானையை கண்காணிக்க மூணாறு வனவிலங்கு காப்பாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அதிநவீன டிரோன்கள் மூலம், இரவு பகலாக யானையை தொடர்ந்து கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் படையப்பாவின் நடமாட்டம் குறித்த தகவல்களை உள்ளூர் மக்களுக்கு தெரிவிக்க முடியும் என்கின்றனர். தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post படையப்பா யானையை கண்காணிக்க சிறப்பு குழு appeared first on Dinakaran.