தர்மபுரி, பிப்.16: கர்நாடக மாநிலத்திலிருந்து, துவரம் பருப்பு ஏற்றிய லாரி, சேலத்தை நோக்கி சென்றது. நல்லம்பள்ளி தொப்பூர் கட்டமேடு அருகே, நேற்று முன்தினம் மாலை வந்தபோது, பின்னால் புனேவில் இருந்து இரும்பு பாரம் ஏற்றிய லாரி வந்து கொண்டிருந்தது. இதற்கு பின்னால் கெமிக்கல் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. இந்த 3 லாரிகளும் கட்டமேடு அருகே வந்த போது, ஒன்றன் பின் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் துவரம் பருப்பு லாரியில் வந்த நீலமோகன், இரும்பு பாரம் லாரியில் வந்த சேலத்தை சேர்ந்த அங்கமுத்து (43), சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். டேங்கர் லாரியில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நியாஸ் முகமது (53), இடிபாடுகளில் சிக்கி கால் முறிந்து மாட்டிக்கொண்டார். தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார், நியாஸ் முகமதை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post படுகாயமடைந்த லாரி டிரைவர் சாவு appeared first on Dinakaran.