
அமிர்தசரஸ்,
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் பணியை அந்த நாடு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியர்களும் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
முதல்கட்டமாக 104 பேர் அண்மையில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். கடந்த 5-ம் தேதி அவர்கள் வந்த விமானம் பஞ்சாபின் அமர்தசரசில் தரையிறங்கியது. அமெரிக்காவில் இருந்து மேலும் இரண்டு விமானங்களில் இந்தியர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமானம் பஞ்சாபில் நாளை தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களுடன் வரும் விமானம் நாளை அமிர்தசரசில் தரையிறங்குகிறது. இந்த விமானத்தை அமிர்தசரசில் தரையிறக்குவதற்கான காரணத்தை வெளியுறவு அமைச்சகம் கூற வேண்டும்.
கடந்த 5-ம் தேதி வந்த, முதல் விமானத்தில் வந்தவர்கள் பெரும்பாலானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். ஆனால், அந்த விமானத்தை ஆமதாபாத்திற்கு அனுப்பி வைக்காமல், அமிர்தசரசில் தரையிறக்கியது ஏன்? பஞ்சாபின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அமிர்தசரஸ் நகர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது" என விமர்சித்துள்ளார்.