
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவிலில் கடந்த 5 -ந் தேதி கம்பம் நடப்பட்டு, இரவு பூச்சொரிதலுடன் சித்திரை திருவிழா தொடங்கியது. கம்பம் நடப்பட்ட அன்றிலிருந்து குளித்தலை மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்கிருந்து தீர்த்த குடம் எடுத்து வந்து கம்பத்திற்கு புனித ஊற்றி வழிபட்டு வந்தனர்.
அதுபோல குளித்தலை நகரப் பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் இருந்தும், பல கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம், அலகு குத்துதல், தொட்டில் கட்டுதல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடனை செலுத்தி வந்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் கடைவீதி, பஜனை மடம், ஆண்டார் தெரு, எம் பி எஸ் அக்ரகாரம், டவுன்ஹால் தெரு வழியாக நிலையை வந்தடைந்தது. தேர் சென்ற வீதிகளில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பில் அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது.
தேரோட்டம் முடிந்த பின்னர் கோவில் முன்பு தீமிதித்தல் நிகழ்வு நடைபெற்றது. பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.