மொஹாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று பெங்களூரு அணி அதிரடியாக ஆடி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐபிஎல் 18வது தொடரின் 37வது லீக் போட்டி, முல்லன்பூரில் நேற்று நடந்தது. இப்போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர்.
இவர்கள் சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த நிலையில், க்ருணால் பாண்ட்யா வீசிய 5வது ஓவரில், டிம் டேவிட்டிடம் கேட்ச் தந்து, பிரியன்ஷ் ஆர்யா (15 பந்து, 22 ரன்) ஆட்டமிழந்தார். சிறிது நேர இடைவெளியில் க்ருணால் வீசிய 7வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் (17 பந்து, 33 ரன்) அடித்த பந்தை டிம் டேவிட் அழகாக கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். பின்னர், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் இங்கிலீஸ் இணை சேர்ந்து ஆடத் துவங்கினர். ஆனால், ஷெப்பர்ட் வீசிய அடுத்த ஓவரிலேயே, ஷ்ரேயாஸ் ஐயர் (6 ரன்), க்ருணாலிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அதன் பின், இங்கிலீசுடன், நேஹல் வதேரா இணை சேர்ந்தார்.
அவரும் அதிக நேரம் நீடிக்கவில்லை. 9வது ஓவரின் கடைசிப் பந்தை ஆடிய வதேரா (5 ரன்) அவசரப்பட்டு ஓடி ரன் அவுட்டாகி வெளியேறினார். மறு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலீஸ், (17 பந்து, 29 ரன்), சுயாஷ் சர்மா பந்தில் கிளீன் போல்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிசும் சொதப்பலாக ஆடி ஒரு ரன்னில் சுயாஷ் சர்மா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதைத் தொடர்ந்து, சஷாங்க் சிங்கும், மார்கோ ஜேன்சனும் பொறுப்புடன் ஆடி ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது. சஷாங்க் சிங் 31, மார்கோ ஜேன்சன் 25 ரன்னுடன் களத்தில் இருந்தனர். பெங்களூரு தரப்பில், க்ருணால் பாண்ட்யா, சுயாஷ் சர்மா தலா 2, ரொமாரியோ ஷெப்பர்ட் ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு அணி வீரர்கள், விராட் கோஹ்லி, பில் சால்ட் களமிறங்கினர்.
முதல் ஓவரில் அர்ஷ்தீப் சிங் நேர்த்தியாக வீசிய பந்தை எதிர்கொண்ட பில் சால்ட் (1 ரன்), இங்கிலீசிடம் கேட்ச் தந்து அதிர்ச்சி அளித்தார். பின், கோஹ்லியுடன், தேவ்தத் படிக்கல் இணை சேர்ந்தார். இவர்கள் அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த இணை 69 பந்துகளில் 103 ரன் குவித்த நிலையில், ஹர்பிரீத் பிரார் வீசிய ஓவரில், வதேராவிடம் கேட்ச் தந்து தேவ்தத் படிக்கல் (35 பந்து, 61 ரன்), ஆட்டமிழந்தார். அதன் பின், கோஹ்லியுடன், கேப்டன் ரஜத் படிதார் இணை சேர்ந்தார்.
இந்த இணை பொறுப்புடன் ஆடிவந்த நிலையில், 17வது ஓவரில், படிதார் (12 ரன்), சஹல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து, ஜிதேஷ் சர்மா களமிறங்கினார். இவர்கள் சேர்ந்து அணியை வெற்றியின் எல்லைக்கு அழைத்துச் சென்றனர். 18.5 ஓவரில், 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்த பெங்களூரு அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கோஹ்லி (54 பந்து, 1 சிக்சர், 7 பவுண்டரி, 73 ரன்), ஜிதேஷ் சர்மா (11 ரன்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியை அடுத்து, பெங்களூரு அணி, 10 புள்ளிகளுடன் 3ம் இடத்துக்கு முன்னேறியது.
The post பஞ்சாப் பரிதாப ஆட்டம்; பெங்களூரு மகத்தான வெற்றி: கோஹ்லி அதிரடி ரன் குவிப்பு appeared first on Dinakaran.