திருவள்ளூர்: பஞ்சமி நிலங்களை கண்டறிந்து தலித் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கலெக்டரிடம் விசிக மாநில செயலாளர் மனு கொடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிந்து அதனை தலித் மக்களிடம் ஒப்படைக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளர் நீலவானத்து நிலவன் கலேக்டர் பிரபு சங்கரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தர்மபுரி மாவட்டத்தில் கரகத்தஹல்லி கிராமத்தில் இருந்த 3.39 ஏக்கர் பஞ்சமி நிலத்தை பிற சமூகத்தைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் ஆக்கிரமித்துக் கொண்டார்.
அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை கைப்பற்ற உரிமை இல்லை என உறுதியாக தெரிவித்தது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசின் வருவாய்துறை, மாவட்ட கலெக்டர்களுக்கும், மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கும் அரசாணை ஒன்றை அனுப்பியது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிந்து ஒப்படைக்க அதில் அறிவுறுத்தப்பட்டது.
ஆதிதிராவிட மக்களுக்கு நிபந்தனையின் அடிப்படையில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் குறித்து வருவாய் வாரியத்தின் நிலை ஆணை 15 தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிலையான ஏ பதிவேட்டில் பஞ்சமி நிலங்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. எனவே ஆதிதிராவிட மக்களுக்கு ஒப்படைவு செய்யப்பட்ட பஞ்சமி நிலங்களை வேறு யார் வாங்கி இருந்தாலும், ஆக்கிரமித்து இருந்தாலும் அது செல்லாது என்பதை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் மூன்றுமே உறுதி செய்துள்ளன.
எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இந்த உண்மைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் வழிகாட்டுதலில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் பஞ்சமி நிலங்களின் விவரங்களை சேகரிப்பதற்கும், அவற்றை தகுதியுள்ள ஆதிதிராவிட மக்களிடம் ஒப்படைதற்கும் புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். அப்போது, விசிக நிர்வாகிகள் செஞ்சி செல்வம், பூண்டி ராஜா வழக்கறிஞர் ரமேஷ் உள்பட பலன் உடனிருந்தனர்.
The post பஞ்சமி நிலங்களை தலித் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்: கலெக்டரிடம் விசிக மாநில செயலாளர் மனு appeared first on Dinakaran.