தர்மபுரி, ஏப்.10: தர்மபுரி மாவட்டம் சின்னாறு குறுக்கே பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள் ₹5 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளியில், சின்னாறு அணை கடந்த 1977ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையில் 50 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கும் வசதி உள்ளது. இந்த அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளாக, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, பெட்டமுகிலாளம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதி உள்ளது.
சின்னாறு அணையில் இருந்து தான், தர்மபுரி நகருக்கு குடிநீர் எடுத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு பெய்த கனமழையின் போது, சின்னாறு அணை 4 முறை நிரம்பியது. இதனால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு, பாப்பாரப்பட்டி பாசன திட்டத்தின் கீழ் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் 10 ஏரிகள் நிரம்பின. இதே போல் சோகத்தூர், கடகத்தூர், ராமக்காள் ஏரிகளுக்கும், அணையின் உபரிநீர் திருப்பி விடப்பட்டது. இதனால், இந்த ஏரிகள் 15 ஆண்டுகளுக்கு பிறகு அப்போது தான் நிரம்பின. ஆனால், கடந்த ஆண்டும், நடப்பாண்டும் போதிய மழை பெய்யாததால், அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து மதகின் வழியாக, பாசனத்திற்கு திறக்கும் தண்ணீர் மற்றும் உபரிநீர் வெளியேற்றம் செய்தால், ஒருகிலோ மீட்டர் தொலைவில் சின்னாறு கால்வாயின் குறுக்கே உள்ள பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகளில் தண்ணீர் தேங்கும். அங்கிருந்து பஞ்சப்பள்ளி ஏரிக்கும், ராஜாபாளையம் புதூர் ஏரிக்கும் தண்ணீர் செல்லும். இந்த 2 அணைக்கட்டுகளை நம்பி, சுற்றுவட்டார பகுதிகளில் 886 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நெல், காய்கறிகள், தென்னை சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு பெய்த கனமழையின் போது, சின்னாறு கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள் உடைந்து சேதமடைந்தன. இதனால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி, தர்மபுரி பாளையம்புதூர் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள் ₹5.50 கோடியில் புனரமைக்கப்படும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இந்த 2 அணைக்கட்டுகளையும் புனரமைக்க நடவடிக்கை எடுத்தனர். இன்று (10ம் தேதி) மாலை 5 மணிக்கு, பஞ்சப்பள்ளி மற்றும் ராஜப்பாளையம் அணைக்கட்டுகள் புனரமைத்தல் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில், வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், நிர்வாக காரணத்தால், அமைச்சர் வருகை மற்றும் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழக முதல்வர் அறிவித்த பின்னர், பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள் ₹5.50 கோடியில் புனரமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளது. வேளாண் துறை அமைச்சர், தடுப்பணை கட்டும் பணியை தொடங்கி வைப்பதாக இருந்தது. சில காரணங்களால் அமைச்சர் வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும்,’ என்றனர்.
The post பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள் புனரமைப்பு appeared first on Dinakaran.