பஞ்ச பூத தலங்களும் அதன் சிறப்புகளும்

2 months ago 12

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறோம். இந்த பிரபஞ்சத்தில் நம் உடல் உட்பட பொருள் தன்மையில் இருக்கும் அனைத்தும் பஞ்சபூதங்களால் ஆன கலவையே. இந்த பஞ்சபூதங்களை எப்படி கையாள்வது மற்றும் அதன் மீது எப்படி ஆளுமை கொள்வது என்பது பற்றி நம்முடைய யோக கலாச்சாரத்தில் பல்வேறு வழிமுறைகளும் பயிற்சிகளும் உள்ளன. அதுமட்டுமின்றி உள்நிலை உணர்ந்த யோகிகள் மக்கள் அனைவரும் பஞ்சபூதத்தின் மீது ஆளுமை கொள்ள வேண்டும் என்பதற்காக சில குறிப்பிட்ட தலங்களை அறிவியல் பூர்வமாக உருவாக்கியுள்ளனர். அவையே பஞ்ச பூத தலங்கள் என அழைக்கப்படுகின்றன.

சிவ பெருமான் கோவில் கொண்டுள்ள இந்த 5 தலங்களில் நான்கு தலங்கள் அதாவது காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம், திருவானைக்காவல் ஆகியவை தமிழகத்திலும், காளகஸ்தி தலம் ஆந்திராவிலும் அமைந்துள்ளது. இந்த ஐந்து தலங்களும் நாயன்மார்களால் பாடப்பட்ட தலங்களாகும்.

நிலத்தை (பூமி) குறிக்கும் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்

இதில் பூமியை குறிக்கும் கோவிலாக இருப்பது ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். இந்த கோவிலிலுள்ள லிங்கத்தை "ப்ருத்வி லிங்கம்" என குறிப்பிடுகின்றனர். இக்கோவில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் மூலவருக்கு "ஏகாம்பரேஸ்வரர்" என்பது திருப்பெயர். மிகவும் புகழ்பெற்ற ஆயிரம் கால் மண்டபம் அமையப்பெற்ற கோவில் இது. மேலும் இது நாயன்மார்களில் ஒருவரான திருக்குறிப்புத் தொண்டருடன் சிவபெருமான் திருவிளையாடல் புரிந்த தலமாகும்.

நீரை குறிக்கும் ஜம்புகேஸ்வரர் திருக்கோவில்

திருச்சி அருகே திருவானைக்காவலில் (திருவானைக்கா) அமைந்துள்ளது ஜம்புகேஸ்வரர் கோவில். இக்கோவில் பஞ்ச பூதங்களில் நீரை குறிக்கும் அம்சமாக திகழ்கிறது. இங்கிருக்கும் மூலவருக்கு ஜம்புகேஸ்வரர் என்றும், திருவானைக்கா உடையார் என்பதும் திருப்பெயராகும். இங்கிருக்கும் லிங்கத்தை "அப்பு லிங்கம்" அல்லது "ஜம்பு லிங்கம்" என குறிப்பிடுகின்றனர். இக்கோவிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் அமைந்திருக்கும் கருவறை தரைமட்டத்திலிருந்து கீழே இருக்கிறது. எனவே அங்கு எப்போதும் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கும் என்பதும், காவிரி வறண்ட காலத்தில் கூட இங்கே நீர் கசிவு இருந்து கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நெருப்பை குறிக்கும் திருவண்ணாமலை திருக்கோவில்

திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் பஞ்ச பூதங்களில் நெருப்பு அம்சத்தை குறிப்பதாகும். இங்கிருக்கும் லிங்கத்தை அக்னி லிங்கம் அல்லது ஜோதி லிங்கம் என குறிப்பிடுகின்றனர். இங்கிருக்கும் மூலவருக்கு அண்ணாமலையார் அல்லது அருணாச்சலேஸ்வரர் என்பது திருப்பெயராகும். இன்றும் சிவாலயங்களில் ஒலிக்கும் புகழ் நிறைந்த திருவெம்பாவையை மாணிக்கவாசகர் இங்கு இயற்றினார். கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் கொண்டாடப்படும் தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும். இங்கு மலை மேல் ஏற்றப்படும் ஜோதியை பலநூறு கிலோமீட்டர் தூரத்திலிருந்து காண முடியும். பவுர்ணமி தினத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வது இத்தலத்தின் தனிச்சிறப்புகளுள் ஒன்று.

காற்றை குறிக்கும் காளத்தீஸ்வரர் கோவில்

தென்னிந்திய சிவாலயங்கள் வரிசையில் மிகவும் முக்கியமான தலமாக விளங்குவது ஆந்திராவின் திருக்காளத்தியில் (ஶ்ரீ காளஹஸ்தி) அமைந்துள்ள காளத்தீஸ்வரர் கோவில். இந்த திருத்தலம் பஞ்சபூதங்களில் வாயுவை குறிப்பதாகும். கண்ணப்ப நாயனார் திருத்தொண்டாற்றி சிவனின் அருள் தரிசனமும் அருளும் கிடைக்கப்பெற்ற தலம் இது. திருப்பதியிலிருந்து 36 கி.மீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ராகு- கேது ஷேத்திரமாகவும், தக்ஷிண கைலாசம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. இங்கிருக்கும் மூலவருக்கு காளகத்தீஸ்வரர் என்பது திருப்பெயர். இங்கிருக்கும் லிங்கம் வாயு லிங்கம் என குறிப்பிடப்படுகிறது.

ஆகாயத்தை குறிக்கும் சிதம்பரம் நடராஜர் கோவில்

பஞ்சபூதங்களில் ஆகாயத்தை குறிக்கும் கோவில் சிதம்பரம் நடராஜர் கோவிலாகும். சமய குரவர் நால்வரும் தேவாரம் பாடிய புண்ணிய தலமிது. இக்கோவிலை சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் என்று அழைப்பது வழக்கம். இங்கிருக்கும் லிங்கத்தை "இந்திர லிங்கம் அல்லது ஆகாச லிங்கம்" என குறிப்பிடுகின்றனர். இக்கோவிலில் நடராஜர் வீற்றிருக்கும் திருச்சபை பொன்னம்பலம் என்றும் கனகசபை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்குள்ள கனகசபையில் நடராஜர் திருவுருவம் அருகே வலது பக்கத்தில் திரையை விலக்கி தீபாராதனை காட்டப்படுவது வழக்கம். அங்கே இறைவன் ஆதியும் அந்தமும் அற்ற ஆகாய உருவில் இருக்கிறார் என்பது நம்பிக்கை.

Read Entire Article