சென்னை: மாநில உரிமைகளைக் காக்கவும், மத்திய – மாநில உரிமைகளை வலுப்படுத்துவதற்கான கூறுகளை ஆராய்ந்திடவும் இன்று குழு அமைத்திருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியதாவது; திராவிட இயக்கத்தின் சமரசமற்ற மரபை எதிரொலிக்கும் ஒரு தீர்க்கமான தருணத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப்; புகழ்பெற்ற ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி; மற்றும் மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் எம். நாகநாதன் ஆகியோர் அடங்கிய மாநில சுயாட்சிக்கான உயர்மட்டக் குழுவை அமைப்பதாக நான் அறிவித்தேன்.
பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், “ஒன்றியமும் மாநிலங்களும் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்டவை. ஒன்று அதன் சொந்தத் துறையில் மற்றொன்றுக்குக் கீழ்ப்படிந்தவை அல்ல” என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறினார். இருப்பினும், மாநிலங்களின் உரிமைப் பரப்பில் ஒன்றியம் தொடர்ந்து ஊடுருவுவது நுட்பமான அரசியலமைப்பு சமநிலையை சீர்குலைத்துள்ளது.
தலைவர் கலைஞர் இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க மாநில சுயாட்சித் தீர்மானத்தின் ஐம்பது ஆண்டுகளை நாம் நிறைவு செய்யும் நிலையில், இந்தக் குழுவின் உருவாக்கம் இன்றைய சூழலில் மாநில சுயாட்சியின் கொள்கைகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் உறுதிப்படுத்த முயல்கிறது.
பலவீனமான மாநிலங்களால் ஒரு வலுவான ஒன்றியம் கட்டமைக்கப்படுவதில்லை. அவைகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் அது கட்டமைக்கப்படுகிறது. மீண்டும் ஒருமுறை, இந்த அழைப்பை வழிநடத்த தமிழ்நாடு எழுந்து நிற்கிறது.
பசியால் வாடித் தவிக்கும் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பது தாய்க்குத் தெரியும். அதனையும் டெல்லியில் இருக்கும் யாரோ ஒருவர் தீர்மானித்தால், அந்தத் தாய் பொங்கி எழுவாள்!
மாநில உரிமைகளைக் காக்கவும், மத்திய – மாநில உரிமைகளை வலுப்படுத்துவதற்கான கூறுகளை ஆராய்ந்திடவும் இன்று குழு அமைத்திருக்கிறோம்.
அந்தக் குழு அளித்திடும் பரிந்துரைகளைச் செயல்படுத்திட, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பசியால் வாடித் தவிக்கும் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பது தாய்க்குத் தெரியும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!! appeared first on Dinakaran.