
சென்னை,
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் விஷ்ணு. இன்ஸ்டா பிரபலமான இவர், ஆன்லைன் டிரேடிங்கில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில் கைதாகி சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் விஷ்ணு, அவரது மனைவி அஸ்மிதா ஆகியோர் தன்னிடம் மோசடி செய்ததாக சந்திரசேகரன் என்பவர் சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் தனித்தனியாக பழகி பணம் பெற்று மோசடியில் விஷ்ணுவின் குடும்பம் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆன்லைன் டிரேடிங் செய்வதாகக் கூறி ரூ.1.62 கோடி மோசடி செய்த இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு, அவரது மனைவி அஸ்மிதா, விஷ்ணுவின் தாய் ஆனந்தி மற்றும் தங்கை ஸ்ரீவித்யா ஆகிய 4 பேர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.