பங்கு சந்தை லாபம் பெற்றுத்தருவதாக 169 பேரிடம் மோசடி கோவையில் கைதான 2 பேர் மீது குண்டாஸ்

3 hours ago 1

கோவை : பங்கு சந்தையில் லாபம் பெற்றுத்தருவதாக 169 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்.

இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என மெசேஜ் வந்தது. இதனை உண்மை என நம்பி அருண்குமார் அதில் குறிப்பிட்டிருந்த செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய நபர் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து லாபத்துடன் முதலீடு செய்வது தொடர்பான வீடியோவை அவரது வாட்ஸ் – அப் எண்ணிற்கு அனுப்பி உள்ளனர். இதனை நம்பி பல்வேறு தவணையாக அவர் ரூ.34 லட்சத்தை அனுப்பி வைத்தார். பின்னர் லாப தொகையையும், முதலீடு செய்த பணத்தையும் அவர்களிடம் திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை தராமல் மோசடி செய்தனர். இது குறித்து அருண்குமார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது செல்போன் எண்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தகவலின் அடிப்படையில் துடியலூரை சேர்ந்த தனசேகரன் (29), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரவிசந்துரு (58) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல்வேறு வங்கிகளின் நூற்றுக்கணக்கான காசோலை புத்தகங்கள், கிரெடிட் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் ரூ.20 கோடிக்கும் மேல் பண பரிவர்த்தனை செய்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பங்கு சந்தையில் அதிக லாபம் பெற்றுத்தருவதாக கூறி தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 169 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். இந்த நிலையில் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண், மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையின் பேரில் கமிஷனர் சரவண சுந்தர், அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

The post பங்கு சந்தை லாபம் பெற்றுத்தருவதாக 169 பேரிடம் மோசடி கோவையில் கைதான 2 பேர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Read Entire Article