பக்த விஜயம் பகுதி – 2

3 weeks ago 6

ஜெயதேவர் சென்ற இதழில்…

ஜெயதேவர் எழுதிய பாடல்களையும், மன்னரின் பாடல்களையும், பகவான் திருவடிகளில் வைத்துக் கதவைக் காப்பிட்டார்கள். இனி…கதவுகளைக் காப்பிட்டது மட்டுமல்லாமல், கோயிலைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள் சிலரும், அரசாங்க அதிகாரிகள் சிலரும், காவலுக்கு இருந்தார்கள். மற்றவர் அனைவரும் தங்கள் இருப்பிடம் திரும்பினார்கள். மறுநாள் காலையில், மன்னர் உட்பட அனைவரும் ஒன்றாகக் கூடி, ஆலயத்திற்குச் சென்றார்கள். அங்கே, கோயில் செல்லும் வழியில், மன்னர் இயற்றிய பாடல்கள் அடங்கிய ஓலைச் சுவடி கட்டு, வீசி எறிந்ததைப் போல, அப்படியே சிதறிக் கிடந்தது. அனைவருமாகக் கோயில் கதவைத் திறந்து பார்த்தார்கள். கருவறையில் பகவானின் திருவடிகளில் வைக்கப் பட்டிருந்த, ஜெயதேவரின் பாடல்கள் அடங்கிய ஓலைச் சுவடிக்கட்டை, யாரோ பிரித்து படித்ததைப் போலிருந்தது. அதை அனைவரும் எடுத்துப் பார்த்தார்கள்.

அந்த ஓலைச் சுவடிக் கட்டின் மேலாக, ‘‘இதை அங்கீகரித்தேன்’’ என்று பகவான் எழுதி இருந்ததைப் படித்தார்கள். அதனை படித்ததும் அனைவரும் கைகளைத் தலைக்குமேல் குவித்து, ‘‘பாண்டுரங்கா! பண்டரிநாதா!’’ என்று பக்தியுடன் கோஷம் எழுப்பினார்கள்; ‘‘தெய்வமே அங்கீகரித்த பக்தகவி!’’ என்று ஜெயதேவரைப் பலவாறாகப் புகழ்ந்தார்கள்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஜெயதேவரின் பேரும் புகழும் அதிகமாயின. ஜெயதேவரின் படைப்புகள் முன்பைவிட வேகமாகப் பரவத் தொடங்கின. அனைவரும் ஆர்வத்தோடு, பக்திப் பரவசத்தில் இசையோடு, ஜெயதேவரின் அஷ்டபதிகளைப் பாடி ஆடினார்கள்.

அதே சமயம், மன்னர் மனவருத்தத்துடன் அரண்மனை திரும்பினார்; ஆலயத்தில் ஆண்டவனால், தன் பாடல்கள் ஒதுக்கப்பட்டதைப் பெரும் அவமானமாகக் கருதி, உண்ணாமல் பகல் பொழுதைக் கழித்தார். இரவு நெருங்கியது. நேரம் ஆகஆக மன்னரின் மனக்கவலை அதிகமானது; பகவானைத் தியானித்து, ‘‘பகவானே! பாண்டு ரங்கா! அன்பே கடவுள் என்று சொல்வார்களே! இரண்யாட்சன், சிசுபாலன் எனப்பலரும் பலவாறாக உன்னைத் தூஷணம் (இகழ்ச்சி) செய்தும், அவற்றையெல்லாம் நீ பூஷணங்களாக (ஆபரணங்களாக) ஏற்று மகிழ்ந்தாயே!’’‘‘புண்டரீகாட்சா! உன்மீது ஆர்வமும் பக்தியும் அன்பும் கொண்டுதானே, நான் பாடல்கள் பாடியிருந்தேன்? அந்தப் பாடல்களை, நீ வெளியே எறியலாமா? என் நாட்டுமக்களின் முன்னால் தெய்வமே! இப்படியா அவமானப் படுத்துவது?’’

‘‘உன் திருநாமங்களையும், உயர் குணங்களையும், திருவிளையாடல்களையும் போற்றி துதித்து, அடியேன் பாடிய பாடல்களை நீ வெறுத்தது ஏன்?’’ ‘‘பரம்பொருளே! இது நான் செய்த தீவினையா? அல்லது உன் இயல்பான சோதனையா? தெய்வமே! கற்கண்டில் ஒரு பக்கம் இனித்து, மறுபக்கம் கசக்குமா?’’ ‘‘தந்தையின் மடியை விரும்பி, அது கிடைக்காமல் போய், காட்டிற்குப்போய்த் தவம் செய்தானே துருவன்! அவனைப் போல நான் தவம்செய்ய வில்லை என்பதாலா? அவன் உனக்கு என்ன உபசாரம் செய்தான்? நான் என்ன அபசாரம் செய்தேன்?

`‘ஜெயதேவரின் பாடல்களுக்கும் என் பாடல்களுக்கும் என்ன உயர்வு தாழ்வு இருகிறது? ஜகந்நாதா! உனக்கு ஏன் இந்தப் பாரபட்சம்?’’ என்று பலவாறாகப் புலம்பிய
மன்னர், களைப்புற்றுத் தூங்கிவிட்டார். அவர் கனவில் காட்சியளித்தார் பகவான்; ‘‘மன்னா! முதலில் ஜெயதேவர் மீது உனக்குள்ளே இருக்கும் பொறாமையைவிடு! ஜெயதேவரின் பாடல்களைப் பக்தியுடன் நீ பாடித்துதி! அவ்வாறு நீ செய்தால், நீ செய்த பாடல்களில் பதின்மூன்று பாடல்களை அங்கீகரிப்பேன் நான்!’’ என்றுகூறி பகவான் மறைந்தார்.

பகவானே சொன்ன பின்னர் மன்னர் மீறத்துணிவாரா என்ன?

மறுநாள் பொழுது விடிந்ததும் எழுந்த மன்னர், ஜெயதேவரைப் பகவானின் அம்சமாகவே கருதித்துதித்துவிட்டு, நேரே கோயிலுக்குப் போனார்; அங்கே ஜெயதேவரின் அஷ்டபதிகளைப் பாராயணம் செய்து கொண்டிருந்த பக்தர்களுடன், தானும் சேர்ந்து பாராயணம் செய்யத் தொடங்கினார். பாராயணம் முடிந்ததும், கருவறையில் இருந்து, ‘‘மன்னா! நீ எழுதிய பாடல்களில், ஆரம்பத்தில் இருக்கும் பதின்மூன்று பாடல்களை யாம் அங்கீகரித்தோம்’’ என்று பகவானே குரல் கொடுத்தார். அதைக் கேட்ட அடியார்கள் எல்லாம், மன்னரின் பாடல்கள் பதின்மூன்று பாடல் களையும் சேர்த்துப் பாராயணம் செய்யத் தொடங்கினார்கள்.

இதன்பின், ஜெயதேவரின் புகழ் மேலும் பரவியது.
அத்தகவல்கள், பத்மாவதியின் தந்தையை (ஜெயதேவரின் மாமனாரை) எட்டின. சந்தோஷம் தாங்கவில்லை அவருக்கு; உடனே ஜெயதேவரைப் பார்க்க வந்துவிட்டார். அவர் வந்த நேரம், ஜெயதேவர் நிஷ்டையில் இருந்தார்.

வீடு தேடிவந்த தந்தையை, அன்போடு வரவேற்று உபசரித்துப் பேசிக் கொண்டிருந்தார், பத்மாவதி. சற்று நேரத்தில் ஜெயதேவரின் நிஷ்டை கலைந்தது. அவர் மாமனாரைப் பார்த்தார்; கைகளைக் குவித்து இனிய வார்த்தைகள் பேசி, அன்போடு வரவேற்றார்; கூடவே மாமனாரின் கால்களில் சந்தனம் பூசி, ‘‘உத்தமரே! உங்கள் பெண்ணால், சாதுக்களுக்குச் செய்யும் சேவை நன்றாக நடக்கிறது’’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் அமர்ந்தார். அப்போது பத்மாவதியின் தந்தை, உளமாற மாப்பிள்ளையை வாழ்த்திவீட்டு, தான் கொண்டுவந்திருந்த ஆடை – ஆபணங்களை எல்லாம் மகள் கைகளில் கொடுத்து, ஆசி கூறிவிட்டுப் புறப்பட்டார்.

ஜெயதேவர் தியானத்தில் இருந்ததால், புறப்பட்ட தந்தையை வழியனுப்புவதற்காகப் பத்மாவதி, சற்று தூரம் அவருடன் கூடச் சென்று அவரை வழியனுப்பிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அதற்குள் தியானம் கலைந்த ஜெயதேவர், வீட்டைவிட்டுப் புறப்பட்டு, நீண்ட தூரம் சென்று, மனித நடமாட்டமே இல்லாத ஒருகாட்டை அடைந்தார்.

மரங்களும் செடி – கொடிகளும், புதர்களும் அடர்ந்திருந்த அந்தக் காட்டில், பறவைகளும் கொடிய விலங்குகளும் போய்க் கொண்டிருந்தன. சற்று நேரம் சுற்றுமுற்றும் பார்த்த ஜெயதேவர், அங்கே உயர்ந்திருந்த மலைக்குகை ஒன்றில் நுழைந்து, குகைக்குள் தூய்மையான ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, பத்மாசனத்தில் அமர்ந்து பகவானைத் தியானிக்கத் தொடங்கினார்.

வீடு திரும்பிய பத்மாவதி, வீட்டிற்குள் கணவரைக் காணாததால், வெளியே வந்து பல இடங்களிலும் தேடினார்; காடு, புதர், மலை எனப் பல இடங்களில் தேடியும் பலனில்லாமல் போயிற்று. இருட்டத் தொடங்கியது. இரு புறமும் தீப்பிடித்துக் கொண்ட மூங்கில் குழாயின் உள்ளே அகப்பட்ட எறும்பைப் போலப் பத்மாவதி பெரும் துயருக்கு ஆளானார்; காட்டிற்குள் இங்கும் அங்குமாகத் தேடிக் கொண்டிருந்த பத்மாவதியின் நீண்ட கூந்தல், செடி – கொடிகளில் சிக்கிக் கொண்டது. வண்டுகளும், இரவு நேரப் பூச்சிகளும், பத்மாவதியைக்
கடித்துத் துன்புறுத்தின. கால்களிலும், கைகளிலும் முள் செடிகள் குத்தி, ரத்தத்துளிகள் வெளிப்பட்டன.

அவ்வப்போது கற்கள் இடறிக் கீழே விழுந்தாள்; அவைபோதாதென்று கரடி, புலி, நரி முதலான காட்டு விலங்குகளின் ஓசைகள் காடெங்கும் எதிரொலித்துப் பத்மாவதிக்கு மேலும் பயத்தை அதிகரித்தன. அடர்ந்த இருட்டு வேறு! பயமும் நடுக்கமுமாகப் பத்மாவதி காட்டின் பல பகுதிகளிலும் தேடினார். பலனில்லை. வீட்டிற்குச் செல்ல மனம் வரவில்லை; எந்தப் பக்கமும் வழியும் தெரியவில்லை. அந்த வேளையில் தட்டுத் தடுமாறி, கால்களாலும் கைகளாலும் தடவித்தடவிப் போய்க் கொண்டிருந்த பத்மாவதி, தெய்வச் செயலாக ஒரு மலைக்குகையில் நுழைந்தார்.அந்த இருட்டிற்குக் கண்கள் பழக்கப்பட்டதும், அப்படியே துழாவிப் பார்த்தால்… குகையில் ஒரு பக்கமாக அமர்ந்து, ஜெயதேவர் பிரம்ம நிஷ்டையில் இருந்தது, பத்மாவதியின் பார்வைக்குப் பிடிபட்டது.

சந்தோஷம் தாங்கவில்லை பத்மாவதிக்கு; ஓடிப்போய்க் கணவரின் கால்களில் விழுந்து அழுதார். பத்மாவதியின் கண்ணீர், ஜெயதேவரின் கால்களில்பட, அவர் நிஷ்டை தெளிந்து பார்த்தார்; அலங்கோலமான நிலையில் கீழே விழுந்து கிடக்கும் பத்மாவதி, ஜெயதேவரின் பார்வையில் தெரிந்தார். தன்னைக் கண்டுபிடிக்கத் தான் அவ்வளவு துயரங்களும் பத்மாவதிக்கு ஏற்பட்டன என்பதைப் புரிந்து கொண்ட ஜெயதேவர், மனைவியுடன் வீடு திரும்பினார்.

சில ஆண்டுகள் ஆயின… ‘‘நீண்ட காலங்கள் ஆனதால், மகளையும் மாப்பிள்ளையையும் பார்த்துவிட்டு வரவேண்டும்’’ என்று எண்ணிய பத்மாவதியின் தந்தை, மகளைப் பார்க்க வந்தார். அவரை அன்போடு வரவேற்று உபசரித்துச் சில நாட்கள் தங்களுடனேயே தங்கியிருக்கச் செய்தார்கள். நாட்கள் சில கடந்தன, பத்மாவதியின் தந்தை ஊர் திரும்ப எண்ணினார்; தன் எண்ணத்தை மகளிடமும் மாப்பிள்ளையிடமும் சொல்லி, அவர்களின் அனுமதியையும் பெற்றார். அவர் புறப்படும் அந்த நாளிலும், ஜெயதேவர் நிஷ்டையில் இருந்தார்.

புறப்பட்ட தந்தையை வழி அனுப்புவதற்காகப் போனார் பத்மாவதி; அவ்வாறு போகும்போது, ‘‘அப்பா! நீங்கள் சென்ற முறை வந்தபோது…’’ என்று தொடங்கி, நடந்தவைகளை எல்லாம் தந்தையிடம் விவரித்தார்; பிறகு பத்மாவதி வீடு திரும்பினார்.

(பக்த விஜயக் கதைகளை நாபாஜி சித்தர் என்பவர், அடியார்களுக்குச் சொல்லிக் கொண்டு வருவதாக உள்ள பக்த விஜய மூல நூலில், இந்த இடத்தில் நாபாஜி சித்தருக்குக் குரல் தழு தழுத்தது; கண்களில் கண்ணீர் ததும்பத் தொடங்கியது. ‘‘உத்தம பக்தர்களே!’’ என்ற நாபாஜி சித்தர் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு மேலே சொல்லத் தொடங்குவதாக உள்ளது)
பத்மாவதி, தந்தையை வழியனுப்பச் சென்றிருந்த நேரத்தில், ஜெயதேவருக்கு நிஷ்டை கலைந்தது. அந்த நேரம் பார்த்து, பகவன்தாஸ் என்ற வியாபாரி, ஜெயதேவரைப் பார்க்க வந்தார். (அவரைப் பற்றி மூலநூல் சொல்லும் தகவல்கள்) மது – மாமிசம் உண்ணாதவர், மாற்றான் மனைவியை விரும்பாதவர், பொய் சொல்லாதவர், ஜீவ காருண்ணியம் நிறைந்தவர், வேதியர்களிடம் மிகுந்த பக்தி கொண்டவர், சாத்திரங்கள் சொல்பவற்றை அப்படியே கடைபிடித்து வாழும் ஒழுக்க சீலர், பெரும் செல்வந்தர் என்றெல்லாம் மூலநூல் விவரிக்கிறது.

(166)அப்படிப்பட்ட பகவன்தாஸ், ஜெயதேவரைக் கண்டு வணங்கி, ‘‘சுவாமி! அடியேனின் முன்னோர் செய்த தவப்பலனோ? அடியேன் செய்த புண்ணியமோ? தெரியவில்லை. இன்று தங்களைத் தரிசிக்கும் படியான பாக்கியம் அடியேனுக்கு வாய்த்திருக்கிறது. தயவுசெய்து தாங்கள் அடியேன் ஊருக்கு எழுந்தருள வேண்டும். அடியேன் இல்லத்தில் எப்போதும் வசிக்க வேண்டும்’’ என்று வேண்டினார்.

நிஷ்டை களைந்திருந்தாலும், தியானம் கலையாத ஜெயதேவர், பகவன்தாஸின் வேண்டுகோளுக்கு ஒப்புதல் தந்தார். பகவன்தாஸிற்கு எல்லையில்லாத மகிழ்ச்சி உண்டானது. உடனே ஜெயதேவரைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட பகவன்தாஸ், பில்வகாமில் இருந்து புறப்பட்டார்; காடு – மேடுகள் கடந்து ஊரை அடைந்து, அங்கே தன் வீட்டிலேயே ஜெயதேவரைத் தங்க வைத்தார். அவரை ஞான குருவாக ஏற்றுப் பணிவிடைகளும் செய்யத் தொடங்கினார். தெய்வ அனுபவம் பெற்ற மகான்களின் செயல்களுக்கு, நம்மால் விளக்கம் (காரண – காரியம்) சொல்ல முடியாது. அப்படிப்பட்ட மகான்களைத் தரிசித்து அவர்களின் அருளை அடைவதும், சுலபமல்ல என்பதை விளக்கும் பகுதி இது.

(தொடரும்…)

பி.என்.பரசுராமன்

The post பக்த விஜயம் பகுதி – 2 appeared first on Dinakaran.

Read Entire Article