விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த 3 சசோதர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
முன்னதாக அந்தப் பகுதியை சேர்ந்த லோகேஷ் மற்றும் அவரது சகோதரர்களான விக்ரம், சூரியா ஆகியோர் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது லோகேஷ் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விக்ரம் மற்றும் சூரியா ஆகியோர், அண்ணன் லோகேசை காப்பாற்றுவதற்காக அவர்களும் பக்கிங்காம் கால்வாய்க்குள் குதித்தனர். இந்த சூழலில் அங்கு கால்வாயின்நீரின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் அவர்கள் மூன்று பேரும் மாயமாகினர்.
இதற்கிடையே நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அக்கம் பக்கத்தினர் அவர்களை தேடி அங்கு சென்றனர். அப்போது அவர்கள் மூன்று பேரும் கால்வாய் அருகில் இல்லை என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் கால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என அச்சமடைந்த அந்த பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கால்வாயில் விழுந்தவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த சூழலில் இரவு 10 மணிக்கு மேல் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மீண்டும் நேற்று காலை 6 மணி அளவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் 22 பேர் மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகுகளில் பக்கிங்காம் கால்வாயில் சென்று தேடினர். காலை 7 மணியளவில் லோகேஷ் உடல் மீட்கப்பட்டது. அவர் தவறி விழுந்த இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் சேற்றில் சிக்கி இருந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது.
இதற்கிடையே சூர்யா, விக்ரம் ஆகியோரது உடல்களை மீட்க தடுப்பணை ஷட்டர்களை அடைத்து, நீரின் வேகம் குறைக்கப்பட்டது. சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட ஸ்கூபா டைவிங் குழுவினர் 11 பேர் கால்வாயில் மூழ்கிய இரட்டையர்களின் உடலை தேடினர். மதியம் 2.45 மணியளவில் விக்ரம் உடலும், மாலை 5.45 மணியளவில் சூர்யாவின் உடலும் மீட்கப்பட்டது.
3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு 3 பேரின் உடல்கள் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.