திருச்சி, சமயபுரத்திற்கு கிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உஜ்ஜைனி ஓம் காளியம்மன் திருக்கோயில். வடநாட்டில் உஜ்ஜயினியை விக்கிரமாதித்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். காளிதேவியின் பரம பக்தன் அவன். எங்கு சென்றாலும் காளியின் திருவுருவையும் உடன் எடுத்துச் சென்று தினசரி பூஜைகள் நடத்தி, பக்தியிலிருந்து வழுவாமல் இருந்தான்.அப்படி ஒரு முறை அவன் வனவாசம் வந்தபோது தன்னுடன் கொண்டு வந்த காளி தேவியை காவிரிக்கரையில் வைத்து வழிபட்டான். அங்கேயே காளிக்கு கோயில் அமைத்து தான் வழிபட்டதோடு மட்டுமல்லாமல், அந்தப் பகுதி மக்களும் வழிபட வழி செய்து கொடுத்தான்.தன்னை இங்கு ஸ்தாபித்து பூஜித்த விக்கிரமாதித்தனிடம் ஒருநாள் காளி, ‘‘இங்கிருந்து 2 கல் தொலைவில் ஒரு சிவாலயம் உள்ளது. அந்த சிவன் கோயிலில் ஒரு முருங்கை மரத்தில் ஒரு வேதாளம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை நீ கீழே இறக்கினால் அது உனக்கு 32 கதைகளையும், உன் வாழ்வுக்கு வர இருக்கும் யோக ரகசியத்தையும் சொல்லும். அதன்படி நீ நடந்தால் உனக்கு உன்னத பதவி கிடைக்கும்” எனக் கூறி மறைந்தாள்.ஆம். நாம் படித்து மகிழும் வேதாளமும் விக்கிரமாதித்தனும் கதை நடந்த தலம் இதுதான்.
அந்த சிவன் கோயிலின் அர்ச்சகர், கர்ப்பகிரகத்தில் ஈசன், உமையம்மைக்கு 32 வேதாந்த ரகசியங்களைக் கதைகளாகச் சொல்லிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்க நேர்ந்தது. சிவன் கோபமுற்று, அங்கிருந்த முருங்கை மரத்தில் வேதாளமாகத் தொங்கும்படியும் விக்கிரமாதித்தனால் அவர் சாபம் நீங்கித் தன்னை அடையலாம் என்றும் கூறினார். சிவனருளால், காளியின் வழிகாட்டலில், அர்ச்சகருக்கு விக்கிரமாதித்தன் மூலமாக சாப விமோசனம் கிடைத்தது.வடக்கு நோக்கி அமைந்துள்ளது கோயில். நுழைவு வாயிலில் அழகான இரு நந்திகள். கருவறையின் நுழைவு வாயிலில் இடதுபுறம் பிள்ளையார். வலதுபுறம் வள்ளி&தெய்வானையுடன் சுப்ரமணியர். முன் மண்டபத் தூணில் ஆஞ்சநேயர். திருச்சுற்றில் வேதாளம், சாஸ்தா, காமாட்சி அம்மன், சீனிவாசப் பெருமாள், கருப்பண்ணசாமி, மதுரைவீரன் ஆகியோரின் சந்நதிகள் உள்ளன. கருவறை சுவரில் இச்சா, ஞான, கிரியா சக்திகளின் தெய்வ உருவங்கள் காணப்படுகின்றன. திருச்சுற்றின் கிழக்கில் சக்தி தீர்த்தம்; மகிழமரம், தலவிருட்சம்.
விக்கிரமாதித்தன் கொண்டு வந்த காளியம்மன் எட்டு கரங்களில் ஆயுதங்கள் தாங்கி, அசுரனை வதம் செய்வது போல காட்சி யளிக்கிறாள். கருவறையிலிருக்கும் அம்மன், நின்ற கோலத்தில் நான்கு கரங்களில் பாசம், அங்குசம், சூலம், கபாலம் தாங்கி ஆனந்த சவுந்தர்யவல்லி என்ற பெயருடன் காட்சியளிக்கிறாள். அழகம்மை, இன்னொரு பெயர். பக்தர்களின் பகை வென்று நல்வாழ்வளிக்கிறாள் இந்த அன்னை.தினமும், எட்டு கால பூஜைகள் நடைபெறுவது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு.
The post பகை ஒடுக்கும் ஓம்காளி appeared first on Dinakaran.