நோய்… மருந்து… நோயாளி… ஒரு பார்வை!

3 weeks ago 6

நன்றி குங்குமம் டாக்டர்

பொது நல மருத்துவர் டி.எம்.பிரபு

‘‘காலநிலை மாறினால் உடலும், மனமும் மாறுமா” என்று பலரும் இன்றைக்கு மருத்துவர்களிடம் பொதுவான கேள்வியாக தொடர்ந்து கேட்கிறார்கள். வெகுஜன மக்களின் பார்வையிலேயே கூற வேண்டுமென்றால், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, நம்முடைய இதிகாசங்களில் ஒரு நூலான மகாகவி காளிதாசர் அவர்கள் எழுதிய ரிது சம்ஹாரம் என்ற நூலில் நான்கு பருவ நிலைக்கு ஏற்ப மனிதர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்று அந்நூலில் கூறப்பட்டு இருக்கிறது.பருவ காலங்களுக்கு என்று ஒரு சில இயல்புகள் என்றுமே இருக்கிறது. ஆனால், இன்றைக்கு இருக்கின்ற தலைமுறையினருக்கு அனைத்து விதமான உணவுகளும், அனைத்து நாட்களிலும் கிடைப்பதால், உடலும் அதற்கேற்றவாறு மாறிக் கொண்டிருக்கிறது.

காலநிலை மாற்றத்தினால் நம் உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி விட்டது என்பது உண்மை. ஆனால் அந்த நோய் எதிர்ப்பு சக்தியை முறையாக செயல்பட விடாமல், நவீன கால லைப் ஸ்டைல் மனிதர்களை நோயாளிகளாக மாற்றி இருக்கிறது என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, நம்மிடம் இருக்கும் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமல் எடை அதிகரிப்பது, சோம்பேறித்தனம் போன்றவற்றால் நம்முடைய உடலின் தன்மையை மாற வைத்து, உடலை சரியாகக் கையாளாமல் இருக்கின்றோம் என்பதே இன்றைய தலைமுறைக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்.

உதாரணத்துக்கு, நம் மக்கள் இன்றைக்கு நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் போது, அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டைப் பற்றி விதம் விதமாக கூறுவார்கள். மருத்துவர்களுக்கோ சில நேரம், நியூட்ரிசியனிடம் பேசிக் கொண்டிருக்கிறோமோ என்கிற அளவுக்கு சந்தேகம் வர ஆரம்பித்துவிடும். அதாவது, சர்க்கரை நோயின் பாதிப்பு குறைய வேண்டும் என்பதற்காக, வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக, நாட்டுச் சர்க்கரை சாப்பிடுகிறேன் என்பார்கள். உண்மையில், வெள்ளை சர்க்கரையும், நாட்டு சர்க்கரையும் கரும்பில் இருந்துதானே வருகிறது. கரும்பின் தன்மை மாறாமல் இருக்கும் போது, எப்படி நாட்டுச் சர்க்கரை, சர்க்கரை வியாதியை வர விடாமல் தடுக்கும் என்பதை மறக்காமல், மருத்துவர்களுக்கு பாடம் எடுப்பார்கள்.

அதாவது, ஒரு நபருக்கு சர்க்கரை வியாதி முற்றிப் போகாமல் இருக்க வேண்டுமென்றால், கண்டிப்பாக இனிப்பு சார்ந்த, வெள்ளை சர்க்கரை, நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, தேன், பனங்கற்கண்டு போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. இங்கு ஒரு வகையான உணவால், நோயின் தன்மை தீவிரமாகும் என்றால், அதற்கு பதில், அதில் சம்பந்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிடக் கூடாது என்பதேயாகும். அதாவது, நோ மீன்ஸ் நோதான்.

இந்த ‘நோ‘ வை அழுத்தமாகச் சொல்லும் போது, மக்கள் உடனே, பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் என்று சில விஷயங்களைக் கூற ஆரம்பிப்பார்கள். இங்கு மருத்துவத்துறையில் விதம்விதமாக அலோபதி, யுனானி, ஹோமியோபதி, சித்த மருத்துவம் என்று மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் பலரும் இருக்கிறார்கள். இதில் யாரைப் பார்த்தாலும், ஓரளவு வியாதியின் தன்மையைப் பொறுத்து, தெளிவான விளக்கங்களை நம் தமிழ்நாட்டு மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உதாரணத்திற்கு ஒரு நபருக்கு தலை வலி (மைக்ரேன்) இருக்கிறது என்றால், அதனால் அவர்களின் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படும் போது, வீட்டில் ஆவி பிடிப்பது, தலைவலி தைலம் தேய்ப்பது எல்லாம் பலன் தராது. அதற்கு முறையான சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதே சரியான முறையாகும்.இன்றைக்கு இருக்கின்ற டிஜிட்டல் உலகில், தகவல்கள் கொட்டிக் கிடக்கும் நேரத்தில், மருத்துவத்துறையைப் பற்றியும், மனிதனுக்கு ஏற்படும் நோயைப் பற்றியும் பலரும் பேசத் தயங்குவதில்லை. உண்மையில், ஒரு இருபது வருடத்திற்கு முன் கூட, தனக்கு ஏற்படும் நோயின் தன்மையைப் பற்றி மருத்துவர் மட்டுமே பேச வேண்டும் என்று ஓரளவு தெளிவான சமூகம் இருந்தது. ஆனால், இன்றைக்கு நோயைப் பற்றியும், நோயின் தீவிரத்தைப் பற்றியும் பலரும் பல விதமாக பேசுவதில் தயக்கமே காட்டுவதில்லை.

இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், மக்களிடையே குழப்பநிலையை ஏற்படுத்துகிறது. இதனால் ஒரு நபர் ஒரு மருத்துவரைப் பார்க்க வரும் போது, குறைந்தது ஐந்து அல்லது ஆறு மருத்துவர்களைப் பார்த்து விட்டு வருகிறோம் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் உடல் நலம் சார்ந்து பேசும் போது, (Communicable Disease) அதாவது கொரோனா, டி.பி போன்றவை எல்லாம் மனிதர்களுக்குள் பரவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் (Non – Communicable Disease) என்ன செய்யுமென்றால், மனதைப் பாதிக்கும் போது பிபி, சுகர், இதயப் பிரச்னைகள் அதிகமாகும்.

இதனால் மக்களுக்கு பயமும், பதற்றமும் அதிகமாகி, அவர்களின் வேலை சார்ந்தோ அல்லது படிப்பு சார்ந்தோ செயல்படாமல், மருத்துவமனை நோக்கி தொடர்ந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் நிறைவேறிய பின்னர், அடுத்தகட்ட வாழ்க்கைக்கு கல்வியும், மருத்துவமும் மிக முக்கியத் தேவையாக இருக்கிறது.

அதற்கு நம்முடைய சமூகத்தில் அரசும், மக்களும் இணைந்து அதை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம் இரண்டுமே நம் தமிழ்நாட்டில் கிடைக்கிறது. ஆனால் இந்த வசதியை அனைத்து மக்களும் பயன்படுத்துகிறார்களா என்றால், அதுவும் கேள்விக்குறியாக இருக்கிறது. உடல் சார்ந்த ஆரோக்கியம் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாததால், திடீரென்று நோயால் பாதிக்கப்படும் போது, பொருளாதார அளவிலும் மக்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

இன்றைக்கு ஒரு தனி நபருக்கு வருமானம் வந்ததும் புதிதாக டிரஸ் எடுப்பது, விதம் விதமான ஹோட்டலில் சாப்பிடுவது என்று இருக்கும் அதே சமயத்தில் உடல் நலத்திற்கு தேவையான, காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கு பெரிதாக யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. மக்கள் அடிப்படைத் தேவைகளை முறையாக நிறைவேற்றிக் கொண்டாலும், இன்னும் நிம்மதியாக வாழ்வதற்கு உடல்நலத்திலும், அதனால் ஏற்படும் செலவிலும் ஓரளவு அக்கறை எடுத்துக் கொண்டு காப்பீடு திட்டமும் எடுக்க வேண்டும் என்கிற புரிதலும் மிக அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.

ஏனென்றால், முதலில் சொன்னது போல், காலநிலையும், பருவநிலையும் அதன் கோரத்தை பாரபட்சமின்றி நம்மிடம் காண்பிக்கும் போது, மக்கள் மருத்துவத்தையும், மருத்துவர்களையும் நம்ப வேண்டும். செம்புல பெயல் நீர் போல அன்புடைய நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற கூற்றிற்கு ஏற்ப – அதாவது மண்ணிற்கு ஏற்ற நிலத்தை நீர் கொடுப்பது போல், நோயின் தாக்கத்துக்கு ஏற்ப, மருத்துவர்களும் மருந்துகளை கொடுக்கிறார்கள்.

இன்றைக்கு ஏற்படும் வெப்ப அலையும், வெள்ளத்துடன் கூடிய புயலும் வரும் போது, மனிதர்கள் மனதாலும், உடலாலும் சோர்வடைந்து விடுவது என்பது இனி இயல்பானதாக இருக்கும். அந்நேரத்தில், சோசியல் மீடியா தகவல்களை மட்டும் முழுமையாக நம்பாமல், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனை என்று தெருவுக்கு தெரு மருத்துவ வசதிகள் உடனுக்குடன் கிடைக்கின்றன. அதனை முறையாக பயன்படுத்துமாறு தான், மருத்துவர்களாகிய நாங்கள் தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கின்றோம்.

அக்டோபர் 10 மனநல விழிப்புணர்வு நாள் என்பதுடன், மருத்துவம் சார்ந்த தெளிவான, முறையான விழிப்புணர்வும் நம் மக்களுக்கு முக்கியத் தேவையாக இருக்கிறது என்பதை தொடர்ந்து நாளிதழ் வழியாகவும், காட்சி ஊடகங்கள் வழியாகவும், கம்யூனிட்டி குழுக்களாக சேர்ந்து செயல்பட வேண்டியத் தேவை இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

The post நோய்… மருந்து… நோயாளி… ஒரு பார்வை! appeared first on Dinakaran.

Read Entire Article