நொகனூர் கிராமத்தில் ராகி வயலை நாசம் செய்து ஒற்றை யானை அட்டகாசம்: பட்டாசு வெடித்து விரட்டியடிப்பு

4 weeks ago 8


தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, ராகி வயலை நாசம் செய்த ஒற்றை யானையை, வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் 20 யானைகள், பேவநத்தம் வனப்பகுதியில் 40 யானைகள் என 60 யானைகள் சுற்றி திரிகின்றன. அதே போல், ஜவளகிரி வனப்பகுதியில் 40 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் தினந்தோறும் இரவு நேரங்களில், அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து ராகி, துவரை, அவரை, தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் ஆகிய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. தகவல் அறிந்த வனத்துறையினர் கண்காணித்து, யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன், தேன்கனிக்கோட்டை பகுதியில் அடைமழை பெய்ததால், யானைகளை விரட்டும் பணி தொய்வு ஏற்பட்டது.

நேற்று அதிகாலை, நொகனூர் கிராமத்தில் ராகி வயலில் புகுந்த ஒற்றை யானை பயிர்களை நாசம் செய்தது. விவசாயிகள் பட்டாசு வெடித்து விரட்டிய போதும் அசராமல், சுமார் 2 மணி நேரம் வயலில் இருந்தபடி பயிர்களை சாவகாசமாக தின்றது. தகவலறிந்து அங்கு வந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர், பட்டாசு வெடித்து யானையை காட்டிற்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து, யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். தேன்கனிக்கோட்டையில் தொடர்ந்து யானைகள் அட்டகாசம் செய்து வருவதால், சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அட்டகாசம் செய்யும் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நொகனூர் கிராமத்தில் ராகி வயலை நாசம் செய்து ஒற்றை யானை அட்டகாசம்: பட்டாசு வெடித்து விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article