கோவையில் 20 ஆண்டில் 35 யானை பலி; தண்டவாளங்களை யானை கடந்தால் ரயிலை நிறுத்தும் ‘ஏஐ’ தொழில்நுட்ப ஆப்: அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது

3 hours ago 2

கோவை: கோவையில் ரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் யானைகள் நடமாட்டத்தை முழுமையாக கண்டறிந்து ரயிலை நிறுத்தும் ஏஐ தொழில்நுட்ப ஆப் அடுத்த மாதம் பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவையில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் போத்தனூர் முதல் கஞ்சிக்கோடு வரையிலான வனப்பகுதி வழியாக செல்கின்றன. ரயில்கள் ஏ, பி என்ற இரண்டு ரயில் பாதைகளில் சென்று வருகின்றன. அதில் `ஏ’ ரயில் பாதை 1.78 கி.மீ. தூரமும், `பி’ ரயில் பாதை 2.8 கி.மீ தூரமும் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்துள்ளன.

இதனால், ரயில் தண்டவாளங்களுக்கு வரும் காட்டு யானைகள், ரயில் மோதி உயிரிழப்பது தொடர்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் 35 காட்டு யானைகள் ரயில் மோதி இறந்தன. இதனை தடுக்க பாலக்காடு ரயில்வே நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகே காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்டறிய 15.42 கோடி ரூபாய் செலவில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் யானை ஊடுருவல் கண்டறிதல் அமைப்பு என்ற செயலியை பாலக்காடு ரயில்வே கோட்டம் உருவாக்கி வருகிறது.

இதற்காக போத்தனூர் முதல் கொட்டேகாடு வரை மொத்தம் 48.4 கி.மீ. தூரத்திற்கு ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் கேபிள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த கேபிள்களுக்கு அருகே யானைகள் வரும்போது, கால்தடங்கள் மூலம் ஏற்படும் அதிர்வுகள் மூலம் வாளையாறு மற்றும் பாலக்காட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் லோகோ பைலேட், வனப்பணியாளர்கள் ஆகியோருக்கு எச்சரிக்கை ஒலியுடன் தகவல் அனுப்பப்படும்.
மொபைல் மற்றும் இணையதளம் மூலம் தகவல் அனுப்பப்படுவதால் தண்டவாளத்தில் உள்ள யானைகள் நடமாட்டத்தை அறிந்து ரயிலின் வேகத்தை குறைக்கவும், நிறுத்தவும் செய்ய முடியும்.

இது குறித்து பாலக்காடு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,“ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் அனைத்து யானை வழித்தடங்களையும் கண்டறியும் வகையில் யானை ஊடுருவல் கண்டறியும் அமைப்பு ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகே கேபிள் பதிக்கும் பணிகள் பி லைனில் 100 சதவீதமும், ஏ லைனில் 82 சதவீதமும் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் யானைகள் மீது ரயில் மோதி விபத்து ஏற்படுவதும், ரயில் விபத்துகளில் யானைகள் உயிரிழப்பது தடுக்கப்படும்” என்றனர்.

The post கோவையில் 20 ஆண்டில் 35 யானை பலி; தண்டவாளங்களை யானை கடந்தால் ரயிலை நிறுத்தும் ‘ஏஐ’ தொழில்நுட்ப ஆப்: அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது appeared first on Dinakaran.

Read Entire Article