சிறந்த நேர்மையான வணிகத்தை உச்சி முகர்ந்து பாராட்டும் இஸ்லாமியநெறி, கெட்ட – மோசடியான வணிகத்தைக் கடுமையாகக் கண்டித்து விலக்குகிறது. ஹராமான (தடுக்கப்பட்ட) சம்பாத்தியம், ஹராமான உணவு, ஹராமான பானம் என ஹராமான வழியிலேயே உடலை வளர்த்தவரின் எந்த இறைஞ்சுதலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று இறைத்தூதர் (ஸல்) தெளிவாக அறிவிக்கிறார்.
“ஒரு மனிதர் தலைவிரி கோலத்துடனும், புழுதிபடிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார்.
“அவர் தம் கைகளை வானை நோக்கி உயர்த்தி, என் இறைவா…என் இறைவா..என்று இறைஞ்சுகிறார்.
“ஆனால்
“அவர் உண்ணும் உணவு ஹராம்
“அவர் அருந்தும் பானம் ஹராம்
“அவர் உடுத்தும் ஆடை ஹராம்.
“அவர் ஹராமான உணவையே உண்டுவருகிறார்.
“இப்படிப்பட்டவரின் இறைஞ்சுதல் எவ்வாறு ஏற்கப்படும்?” (மிஷ்காத்-
நபிமொழி எண்-2760)
“நேர்மையான வணிகர் மறுமை நாளில் இறைத்தூதர்கள், வீரமரணம் அடைந்த தியாகிகள், உண்மையாளர்கள் ஆகியோருடன் இருப்பார்” என்று நற்செய்தி அறிவித்தார் நபிகளார் (ஸல்). நேர்மையான வணிகருக்கு சொர்க்கமே பரிசு. மோசடி, ஏமாற்று, பித்தலாட்டம், பொய் சத்தியம் செய்து லாபம் ஈட்டுகின்ற வணிகர்களுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனைகள் மிக மிகக் கடுமையாக இருக்கும். வட்டி இன்று ஒரு வியாபாரம் போல் ஆகிவிட்டது.
“வட்டி வாங்கிச் சாப்பிடுபவன், அதைச் சாப்பிடக் கொடுப்பவன், அதற்கான கணக்கை எழுதுபவன் ஆகியோரை இறைத்தூதர் (ஸல்) சபித்தார்கள்.” (மிஷ்காத்- 2829) மதீனா சந்தையைப் பார்வையிட நபிகளார் (ஸல்) வருகிறார். ஓர் இடத்தில் கோதுமைக்
குவியல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அதன் அருகில் சென்ற நபிகளார், குவியலுக்குள் கைவிட்டுப் பார்க்கிறார். கோதுமை ஈரமாக இருக்கிறது.
“கோதுமையின் உரிமையாளரே, என்ன இது?” என கண்டிக்கும் தொனியில் கேட்கிறார்.
“அது… அது வந்து.. இறைத்தூதர் அவர்களே, மழை வந்துவிட்டதால் ஈரமாகிவிட்டது” என்கிறார் கடைக்காரர்.
“அப்படியானால் அதை அனைவரும் பார்க்கும் வகையில் அல்லவா வைத்திருக்க வேண்டும்? மோசடி செய்பவர் என்னைச் சார்ந்தவர் அல்ல” என்று எச்சரித்தார் இறைத்தூதர் (ஸல்). ஊக வணிகங்களுக்குத் துளியும் இடமில்லை என்பதையும் பல நபிமொழிகள் விளக்குகின்றன.
வழக்கறிஞர் ஒருவருடைய அலுவலகத்தில் எப்படி அரசியல் அமைப்புச் சட்ட நூல் இருக்குமோ அப்படி வணிகம் தொடர்பான இத்தகைய நபிமொழித் தொகுப்பு நூல் ஒவ்வொரு வணிக நிறுவனத்திலும் வணிக வளாகத்திலும் கடைகளிலும் இருக்க வேண்டும். இறைநினைவோடும் மறுமை அச்சத்தோடும் வணிகம் செய்பவர் நற்பேறு பெற்றவர்கள் ஆவர்.
-சிராஜுல் ஹஸன்.
இந்த வாரச் சிந்தனை
“இறைவன் வியாபாரத்தை அனுமதிக்கப்பட்டதாகவும் (ஹலால்), வட்டியைத் தடுக்கப்பட்டதாகவும் (ஹராம்)
ஆக்கியுள்ளான்.” (குர்ஆன் 2:275)
The post நேர்மையான வணிகருக்கு சொர்க்கமே பரிசு! appeared first on Dinakaran.