
நேபாள நாட்டின் பாக்மதி மாகாணம், பக்தபூர் மாவட்டத்தில் உள்ளது டோலகிரி மலைப்பகுதி. இதன் உச்சியில் அமைந்த ஒரு கிராமம்தான், 'சங்கு'. திருமாலின் கரத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய திருச்சங்கின் பெயரில் அமைந்த இந்த கிராமத்தில், 'சங்கு நாராயணர் கோவில்' அமைந்திருக்கிறது. நேபாளத்தில் மிகவும் பழமையான ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் இந்தக் கோவில் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆலயம் நேபாள நாட்டின் பவுத்த கட்டிடக்கலை அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் கி.மு. 325-ம் ஆண்டு, லிச்சாவி வம்ச மன்னன் ஹரி தத்தா வர்மனின் காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.
இந்த ஆலயத்தின் தரை தளத்தில் அமைந்த கல் தூண்களில், கி.பி. 496-ம் ஆண்டு முதல் கி.பி.524-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த மகாதேவன் என்ற மன்னனின் படையெடுப்புகள் குறித்து பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியை கி.பி. 1585 முதல் 1614-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சிவ சிம்ம மல்லன் என்ற அரசனின் பட்டத்து அரசியான கங்கா ராணி என்பவர், இந்த ஆலயத்தை மீண்டும் புதுப்பித்துள்ளார். இந்தக் கோவிலின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கூரைகள் அனைத்தும் தங்கம் கலந்த செப்புத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இதனை கி.பி.1708-ம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்த பாஸ்கர மல்லர் என்ற மன்னன் செய்திருக்கிறான்.
கருங்கற்களால் இரண்டு அடுக்குகளாக கட்டப்பட்ட இந்த ஆலயம், நேபாள நாட்டிலேயே மிகவும் பழமையானது என்று போற்றப்படுகிறது. இந்தக் கோவிலைச் சுற்றிலும் திருமாலுக்கு உரிய சிற்பங்கள் அதிகமாக செதுக்கப்பட்டுள்ளன. முதன்மை கோவிலின் பிரகாரத்தில் சிவன், கிருஷ்ணர், சின்னமஸ்தா ஆகிய தெய்வங்களின் சன்னிதிகள் அமைந்துள்ளன. சன்னிதி வாசல்களில் சிங்கங்கள், சரபங்கள், யானைகள் மற்றும் யாழி சிற்பங்கள் உள்ளன.
திருமாலின் பத்து அவதாரங்களைக் குறிக்கும் வகையிலான சிற்பங்கள், இந்த ஆலயத்தின் கூரையை தாங்கியபடி அமைந்துள்ளது. மேற்கு வாசலின் எதிரில் உள்ள தூணில் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கட்கம் மற்றும் தாமரை ஆகியவற்றின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த தூண் கி.மு. 464-ம் ஆண்டு லிச்சாவி இன மன்னன் மனதேவன் என்பவரால் எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆலயத்தில் சில முக்கிய சிற்பங்கள் போற்றுதலுக்குரியதாக உள்ளன. அவற்றில் திருமாலின் வாகனமான கருடனின் சிற்பமும் ஒன்று. இது தவிர கருட வாகனத்தில் பறக்கும் திருமாலின் 7-ம் நூற்றாண்டு சிற்பம் சிறப்புற அமைந்துள்ளது. இந்த தெய்வத்தை 'சந்திர நாராயணர்' என்று அழைக்கிறார்கள். மேலும் கலைநயத்துடன் அமைந்த விஷ்ணு, லட்சுமி மற்றும் கருடன் சிற்பங்கள், சின்னமஸ்தா தேவி, அர்ச்சுனனுக்கு பகவத் கீதை உபதேசிக்கும் கிருஷ்ணரின் விஸ்வரூபக் காட்சி, இரணியகசிபுவை வதம் செய்து பிரகலாதனைக் காத்த நரசிம்மர் ஆகியோரது சிற்பங்களும், இரண்டாம் அடுக்கில் அமைந்த சிவன் கோவிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த ஆலயத்தில் தினமும் பூஜைகள் நடைபெறுவதில்லை. ஏகாதசி, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்த ஆலயத்தின் முக்கியமான திருவிழாவாக, சங்கு நாராயணர் யாத்திரை திருவிழாவும், மகாஷானன் திருவிழாவும் உள்ளன.
காத்மாண்டு நகரத்திற்கு கிழக்கில் 12 கிலோ மீட்டர் தொலைவிலும், பக்தபூர் நகரின் வடக்கே 7 கிலோமீட்டர் தூரத்திலும் சங்குநாராயணர் கோவில் அமைந்துள்ளது.