நெல்லை: நெல்லையில் போலீசார் வாகன சோதனையின் போது காரில் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகளுடன் வந்த தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவன தலைவர் கண்ணபிரான் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், கைத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள், 5 அரிவாள்கள், மிளகாய் பொடி பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டன. நெல்லை மாவட்டம், தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்தவர் கண்ணபிரான் (47) தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவன தலைவர். இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
நேற்று மாலை இரு கார்களில் கண்ணபிரான் தனது ஆதரவாளர்களுடன் நடுவக்குறிச்சியில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். அப்போது மேலப்பாட்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பாளை. தாலுகா போலீசார், கண்ணபிரான் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கார்களை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் 7 எம்எம் கைத்துப்பாக்கி, 4 நாட்டு வெடிகுண்டுகள், 5 அரிவாள்கள், 2 கத்தி, மிளகாய் பொடி பாக்கெட்டுகளை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து கண்ணபிரான் உள்பட 15 பேரையும் பாளை. தாலுகாபோலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக வழக்குப் பதிந்து கண்ணபிரான், அவரது ஆதரவாளர்கள் அருண்குமார் (32), ராக்கி என்ற சிவா, ஷெரீன், அபினேஷ், மதிபாலன், சிவா, முத்துசெல்வன், உய்காட்டான், பாலாஜி, துரைபாண்டி, கார்த்திக் உள்பட 15 பேரை கைது செய்தனர்.
* எஸ்பி எச்சரிக்கை
நெல்லை எஸ்பி சிலம்பரசன் கூறுகையில், ‘தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவன தலைவர் கண்ணபிரான் கைது தொடர்பாக சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக பகிரப்பட்டு வருகிறது. கண்ணபிரான் வந்த வாகனங்களில் சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டுகள், கள்ளத்துப்பாக்கி, அரிவாள்கள் போன்ற ஆயுதங்கள் வைத்திருந்ததாக பாளை. தாலுகா போலீசார் அவரை கைது செய்துள்ளனர். உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.
* ‘குமுளி ராஜ்குமார்’ பரமக்குடியில் கைது
தேவேந்திரகுல மக்கள் இயக்கம் அமைப்பின் மாநில தலைவரும், நிறுவனருமான ‘குமுளி ராஜ்குமார்’ ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கணபதியேந்தல் கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்றார். இந்த நிலையில், திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கணபதியேந்தல் கிராமத்திற்கு சென்று, அங்கிருந்த குமுளி ராஜ்குமாரை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்ததாக தெரிகிறது. குமுளி ராஜ்குமாரை அவரது உறவினர்கள் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்று மாலை தேவேந்திரகுல மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் குவிந்தனர். தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கைது செய்யப்பட்ட குமுளி ராஜ்குமார் திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலையத்தில் இருப்பதாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
The post நெல்லையில் வாகன சோதனையில் சிக்கினர் தேவேந்திரகுல வேளாளர் தலைவர் உள்பட 15 பேர் ஆயுதங்களுடன் கைது: 2 கார், கைத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.