
திருநெல்வேலி மாநகரம், சந்திப்பு பஸ் நிலையத்தில் லாரி டிரைவரான கருங்குளத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ஆம்ஸ்ட்ராங் (வயது 43) என்பவர் நேற்று முன்தினம் சந்திப்பு பஸ் நிலையத்தில் பேருந்திற்கு ஆக்டிங் டிரைவர் வேலைக்காக சென்றுள்ளார். அவர் அன்று இரவு சந்திப்பு பேருந்து நிலையத்தில் நிறுத்தியிருந்த ஒரு தனியார் பேருந்தில் ஏறிப் படுத்திருந்தார்.
அப்போது உத்தமபாண்டியகுளத்தைச் சேர்ந்த சுடலைமணி மகன் வேல்ராஜ் மற்றும் வசவபுரத்தைச் சேர்ந்த ஆச்சிமுத்து மகன் ரமேஷ் ஆகிய 2 பேரும் அந்தப் பேருந்தை இயக்கி உள்ளனர். அப்போது அவர், ஏன் பஸ் டிரைவருக்கு தெரியாமல் பஸ்ஸை எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவரை, அந்த இருவரும் அவதூறு வார்த்தைகளால் பேசி, நெல்லை சந்திப்பு தேவர் சிலை அருகில் பேருந்தை நிறுத்தி, மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தின் இடது புறமும், இடது கை மணிக்கட்டிலும் குத்தி, அச்சுறுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுதொடர்பாக ஆம்ஸ்ட்ராங் அளித்த புகாரின்பேரில் நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.