
நெல்லை,
நெல்லை மாநகர் டவுன் பகுதியில் கடந்த மார்ச் 18-ந்தேதி அதிகாலை தொழுகை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த முன்னாள் எஸ்.ஐ. ஜாகீர் உசேன் பிஜிலி, நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
முன்னதாக ஜாகீர் உசைன் வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக, சில நாட்களுக்கு முன்பு ஜாகீர் உசைன் பேசிய காணொளி வெளியாகியிருக்கிறது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர், திருநெல்வேலி 4-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முகமது தவுபிக் என்ற கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி நூருண்ணிசா உள்பட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நெல்லை மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முகமது தவுபிக் என்ற கிருஷ்ணமூர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்று, கிருஷ்ணமூர்த்திக்கு ஒருநாள் போலீஸ் காவல் அளிக்க நெல்லை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.