நெல்லையில் அரசு பஸ்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் டிக்கெட் எடுக்கும் முறை அமலுக்கு வந்தது

2 weeks ago 5

நெல்லை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து சேவையில் பண பரிவர்த்தனையை நவீனமயமாக்கும் வகையில் பயணிகளின் வசதிக்காக மின்னணு டிக்கெட் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனையில் முறையில் இந்த எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

அதன் வெற்றிக்கு பின்னர் தற்போது மாநிலம் முழுவதும் அரசு பஸ்களில் மின்னணு டிக்கெட் எந்திரங்கள் மூலம் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த எந்திரங்கள் மூலம் பயணிகளுக்கு விரைவில் டிக்கெட் வழங்க முடியும். இதனால் காலதாமதம் ஏற்படாது. இதற்கு முன்பு நடத்துனர்கள் தங்கள் கைகளில் பல வண்ணங்களில் டிக்கெட்டுகளை வைத்துக்கொண்டு கூட்ட நெரிசலில் சிரமத்துடன் டிக்கெட் வழங்கி வந்தனர்.

தற்போது இந்த மின்னணு எந்திரம் அந்த சிரமத்தை குறைத்துள்ளது. இந்த எந்திரங்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. ரொக்க பணம் இல்லாமல் பஸ்சில் ஏறும் பயணிகள் இந்த எந்திரங்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும், ஜிபே, போன்பே போன்ற செயலிகள் மூலம் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். ஆனால் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக இந்த சிறப்பு அம்சங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது அந்த பிரச்சினைகளை சரி செய்து உள்ளனர்.

இதையடுத்து நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து பஸ்களிலும் இந்த டிஜிட்டல் பணபரிவர்த்தனை டிக்கெட் வழங்கும் பணி அமலுக்கு வந்துள்ளது. இதை பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில், பஸ்களின் முன்பக்க கண்ணாடியில் "இப்பேருந்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம்" என்று ஸ்டிக்கர் ஒட்டி உள்ளனர்.

இதுகுறித்து நெல்லை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "மக்கள் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை தற்போது எளிதாக கையாண்டு வருகிறார்கள். எனவே அனைத்து அரசு பஸ்களிலும் டிக்கெட்டுக்கு உரிய கட்டணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.

இணையதள வசதி கிடைக்காமல் சர்வர் பிரச்சினை ஏற்பட்டால், வழக்கம் போல் டிக்கெட் வழங்கப்படும். கண்டக்டர்கள் அதற்கு தேவையான டிக்கெட்டுகளை தயார் நிலையில் வைத்திருப்பார்கள். இதை பயணியே முடிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் சில்லரை பிரச்சினை இனிமேல் ஏற்படாது" என்றனர்.

Read Entire Article