
நெல்லை,
நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று (1.4.2025) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வேணுவனநாதர் தோன்றி வரலாறு வாசித்தல் நிகழ்ச்சி காலை 10 மணிக்கும், இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

10-ந் தேதி இரவு 7 மணிக்கு கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் விழா நடக்கிறது.
இந்த திருவிழாவின் சிறப்பம்சமாக, உடையவர் லிங்கத்தை இன்று முதல் 8 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
கருவறையில் உள்ள உடையவர் லிங்கத்தை வெளியே எடுத்து உற்சவ மண்டபத்தில் வைத்து, 2-ம் திருநாளான இன்று முதல் (புதன்கிழமை) முதல் 9-ம் திருநாள் வரை தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறும். இந்த அபிஷேகத்தை காணும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக நீண்ட காலம் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
பங்குனி உத்திர திருவிழா காலங்களில் 8 நாட்கள் மட்டுமே இந்த உடையவர் லிங்கம் கருவறைக்குள் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.