நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி

7 hours ago 2

*4 அரசு பள்ளிகள் முழு தேர்ச்சி

நெல்லை : பிளஸ்2 பொதுத் தேர்வில் நெல்லை மாவட்டத்தில் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளன. இதில் 4 அரசு பள்ளிகள் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளன. பிளஸ்2 பொதுத்தேர்வில் நெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 187 பள்ளிகளில் 68 பள்ளிகள் மட்டும் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

இதில் மொத்தம் உள்ள 50 அரசு பள்ளிகளில் 4 அரசு பள்ளிகளும் அடங்கும் நெல்லை ராமையன்பட்டியில் உள்ள அரசு மாதிரி பள்ளி, வெள்ளாங்குழி அரசு மேல்நிலைப்பள்ளி, குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லம்மாள் புரம் அரசு ஆதிதிராவிடர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளன.

இதேபோல் அரசு உதவிபெறும் 61 பள்ளிகளில் 13 பள்ளிகள் 100% தேர்ச்சியை எட்டியுள்ளன. பாளை பிளாரன்ஸ் காது கேளாதோர் பள்ளி, மேலப்பாளையம் ரஹ்மானியா மேல்நிலைப்பள்ளி, பாளை செயின்ட் இக்னேஷியஸ் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி, வடக்கன்குளம் செயின்ட் தெரசா மேல்நிலைப்பள்ளி, கூடங்குளம் செயின்ட் ஆன்ஸ் மேல்நிலைப்பள்ளி, வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, அலவந்தான்குளம் செயின்ட் அந்தோனிஸ் மேல்நிலைப்பள்ளி, பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளி, பெட்டைகுளம் எஸ்எம் காதர் மீரா சாயிபு மேல்நிலைப்பள்ளி, திசையன்விளை ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, நெல்லை ராஜகிருஷ்ணாபுரம் செயின்ட் ஆன்ஸ் மேல்நிலைப்பள்ளி, மன்னார்புரம் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, உவரி செயினட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்ஜினியரிங் படிப்பிற்கு விண்ணப்பிக்க 3 மையங்கள்

*கலெக்டர் சுகுமார் தகவல்

நெல்லை : பிளஸ்2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சுகுமார் வாழ்த்து தெரிவித்தார். மேலும் மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பிற்கு விண்ணப்பிக்க 3 மையங்கள் செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வில் 187 பள்ளிகளில் 19,582 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 18,706 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் 10,393 மாணவிகளும் (97.29 சதவீதம்), 8,313 மாணவர்களும் (93.42 சதவீதம்) என மொத்தம் 95.53 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

வெள்ளாங்குளி அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி அரசு மாதிரி பள்ளி, குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லம்மாள்புரம் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த கலெக்டர் சுகுமார் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி மையம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. மாணவர்கள் கல்வி ஆலோசனை பெற 9500324417, 9500524417 எண்களை அழைக்கலாம்.

பொறியியல் பயில விரும்பும் மாணவர்கள் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்காக நெல்லை அரசினர் பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் திருநெல்வேலி மண்டல அலுவலகம், ராணி அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய மூன்று மையங்கள் செயல்படுகிறது. மாணவர்கள் இந்த மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் 95.53% பேர் தேர்ச்சி

தியாகராஜ நகர் : நேற்று காலை வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் நெல்லை மாவட்டத்தில் 95.53 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 16வது இடத்தை பிடித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் தமிழக அளவில் நெல்லை மாவட்டம் 95.53 சதவீதத்துடன் 16வது இடத்தை பிடித்துள்ளது. இம்மாவட்டத்தில் மொத்தம் 187 பள்ளிகளில் நடைபெற்ற தேர்வில் 68 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. 8,813 மாணவர்கள் பங்கேற்ற தேர்வில் 8,312 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

10,683 மாணவிகள் தேர்வு எழுதியதில் 10,393 மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.42 சதவீதமும், மாணவிகள் 97.29 சதவீதமும் வெற்றி பெற்றுள்ளனர்.நெல்லை மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவிகள் 95.63 சதவீதமும் மாணவர்கள் 87.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி நெல்லை மாவட்டத்தில் 92.57 சதவீதமாக உள்ளது.

The post நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article