நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் பொருநை புத்தக திருவிழா இன்று தொடக்கம்

1 week ago 3

*124 அரங்குகள் இடம்பெறுகிறது

நெல்லை : நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் பொருநை புத்தகத் திருவிழா, இன்று (31ம் தேதி) தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. மொத்தம் 124 அரங்குகள் இடம்பெறுகிறது.

நெல்லையின் சிறப்புகள் மற்றும் பண்பாடு, கலை, இலக்கியம், இயற்கை சூழலியல் என அனைத்து சிறப்புகளையும் கொண்டாடும் வகையில் பொருநை புத்தக திருவிழா, நெல்லையில் இன்று (31ம் தேதி) காலை 11 மணிக்கு துவங்குகிறது.

மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெறும் புத்தக திருவிழா துவக்க விழாவிற்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை வகிக்கிறார். சபாநாயகர் அப்பாவு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கின்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா வரவேற்கிறார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் பேசுகிறார்.

விழாவிற்கு பொது நூலக இயக்குநர் சங்கர், நெல்லை சரக டிஐஜி மூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் காதிமணி, மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, எஸ்பி சிலம்பரசன், நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

ராபர்ட் புரூஸ் எம்பி, எம்எல்ஏக்கள் அப்துல்வஹாப், ரூபி மனோகரன், நயினார் நாகேந்திரன், இசக்கி சுப்பையா, மேயர் ராமகிருஷ்ணன் துணை மேயர் கேஆர் ராஜூ, மாவட்ட ஊராட்சி தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஸ், பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம், செயலாளர் முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். ெதாடக்க விழாவில் 5 புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

புத்தக திருவிழாவிற்காக 124 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 10ம் தேதி வரை 11 நாட்கள் புத்தக திருவிழா நடக்கிறது. தினமும் மாலையில் கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதல் நாளான இன்று (31ம் தேதி) மாலை 6 மணிக்கு நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது.

இன்று (31ம் தேதி) மற்றும் 1ம் தேதி நெல்லை வர்த்தக மையத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலைத் திருவிழா நடக்கிறது. 1ம் தேதி மாலை வள்ளியூர் மற்றும் அம்பையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலைவிழாக்கள் நடக்கின்றன. புத்தக திருவிழாவை பபாசி, பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் ஆகியவை இணைந்து நடத்துகிறது.

புத்தகம் பரிசு

அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அதிக அளவில் புத்தகங்கள் வாங்க ஊக்குவிக்கும் வகையில் புத்தக பரிசு கூப்பன்கள் வழங்கப்படுகின்றன. புத்தக திருவிழா அரங்கில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு உடனுக்குடன் புத்தகம் பரிசு வழங்கப்படுகின்றன. புத்தக திருவிழாவில் ஓவியப்போட்டியில் வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

The post நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் பொருநை புத்தக திருவிழா இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article