*மாநகராட்சி நடவடிக்கை
நெல்லை : நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல இடங்களில் பாதாள சாக்கடை பணிக்காக சாலையின் நடுவில் குழிகள் தோண்டப்பட்டு பிரதான குழாய்கள் பதிக்கப்பட்டன. பின்னர் சாலையும் அமைக்கப்பட்டது.
இருப்பினும் இச்சாலைகளில் பாதாள சாக்கடை திட்ட குழாய்களில் திடீரென அடைப்பு ஏற்படும் போது அதனை சரிசெய்ய வேண்டி சாலையின் நடுப்பகுதியில் ‘மேன்வெல்’ குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மேன்வெல் குழிகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் நடுவில் பள்ளமாக காணப்படுகிறது. இதனால் மழை காலத்தில் இந்த மேன்வெல் குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் தட்டுதடுமாறி விழுந்து செல்கின்றனர்.
இதுபோல் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களும் பாதாள சாக்கடை மேன்வெல் குழிகளில் விழுந்து செல்வதால் வாகனங்களும் சேதமடைகின்றன. சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகிறது. இதை சரிசெய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்பேரில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை மேன்வெல் குழிகள் சாலைக்கு இணையாக சிமென்ட் வளையம் அமைத்து மூடிகள் அமைக்கப்பட்டன.
பாளை தெற்கு பஜார் பகுதியில் லூர்துநாதன் சிலையில் இருந்து எஸ்பி அலுவலகம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை மேன்வெல் குழிகளை சாலைக்கு இணையாக சிமென்ட் வளையம் வைத்து மூடி அமைக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பணிகள் முடிந்த பாதாள சாக்கடை திட்ட மேன்வெல் குழிகளில் கூம்பு வடிவிலான சிகப்பு கலர் சிக்னல் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரு நாட்கள் பணி நடந்துமுடிந்த பாதாள சாக்கடை திட்ட மேன்வெல் குழிகள் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டு கான்கிரீட் காயும் வரை பணியாளர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இதனால் சாலையின் மட்டத்துக்கு பாதாள சாக்கடை ‘மேன்வெல்’ குழிகளும் அமைக்கப்பட்டுள்ளதால் விபத்துக்கள் ஏற்படாத வகையில் வாகனம் செல்ல ஏதுவாக அமைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
The post நெல்லை மாநகர சாலைகளில் பாதாள சாக்கடை திட்ட மேன்வெல் குழிகளை சீரமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.