திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா இன்று (அக்.26) பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி. கலையரங்கில் நடைபெற்றது. விழாவில், பல்கலைக் கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி தலைமையேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள தேசிய புவியறிவியல் ஆய்வு மையத்தின் இயக்குநர், பேராசிரியர் என்.வி. சலபதி ராவ் பங்கேற்று பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். விழாவில் மொத்தம் 571 பேருக்கு தமிழக ஆளுநர் திரு ஆர்.என். ரவி பட்டங்களை வழங்கினார். அதில், 111 பேர் (ஆண் 14; பெண் 97) தங்கப்பதக்கமும், 460 பேர் (ஆண் 83; பெண் 377) முனைவர் பட்டங்களும் பெற்றனர். இவற்றுள் தமிழக அளவில் மிக அதிகமாக சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டில் 377 ஆய்வு மாணவியர் முனைவர் பட்டம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.