நெல்லை: நகை மோசடி வழக்கில் 18 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

22 hours ago 2

திருநெல்வேலி டவுண், மேலரதவீதியைச் சேர்ந்த செல்லத்துரை டவுண் பகுதியில் சொந்தமாக நகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் செல்லத்துரை கடைக்கு வந்த முக்கூடல், வடக்கு அரியநாயகிபுரம், தேரடி தெருவைச் சேர்ந்த மகாராஜன் (வயது 66) என்பவர் ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 534 மதிப்பிலான தங்க நகைகள் செய்து தர வேண்டும் என்று கூறி அட்வான்ஸ் தொகையாக ரூ.65 ஆயிரம் மட்டும் கொடுத்து தங்க நகைகளை வாங்கி விட்டு, மீதி தொகையை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதனையடுத்து மகாராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி செல்லத்துரை நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து தேடப்பட்டு வந்த மகாராஜனை கைது செய்து நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு-I டி.எஸ்.பி. விஜயகுமார் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் எஸ்.எஸ்.ஐ. கண்ணன், ஏட்டு முத்துராமலிங்கம் ஆகியோர் மகாராஜனை தேடி வந்த நிலையில் சென்னை, மேற்கு தாம்பரம், முடிச்சூர் அருகே இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று நேற்று முன்தினம் (31.03.2025) மகாராஜனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

இவ்வழக்கில் தங்க நகைகளை பெற்று பண மோசடி செய்து 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை, சிறப்பாக செயல்பட்டு கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார். 

Read Entire Article