சென்னை: திருநெல்வேலியில், மாவட்ட நீதிமன்றம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக தமிழகத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலியில், மாவட்ட நீதிமன்ற நுழைவாயில் அருகே மாயாண்டி என்ற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலானது. இக்கொலை தொடர்பாக தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், இக்கொலை சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.