
நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூர் சிறுக்கன்குறிச்சியை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் மாதேஷ் (6 வயது), அங்குள்ள பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று அப்பகுதியில் நடந்த கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு சிறுவன் மாதேஷை தாயார் அழைத்து சென்றார். அப்போது பலத்த காற்றில் தோட்டத்துக்கு சென்ற உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தது.
இதனைக் கவனிக்காமல் சென்ற சிறுவன் மாதேஷ் மின்கம்பியில் மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். தனது கண் எதிரே மகன் மின்சாரம் தாக்கி இறந்ததால் அதிர்ச்சியில் தாயாரும் மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.