நெல்லை,
நாகர்கோவில் சந்திப்பில் இருந்து பெங்களூருவுக்கு தினமும் இரவு 7.15 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் பொங்கல் விடுமுறை முடிந்து ஊருக்கு செல்ல பயணிகள் கூட்டம் இந்த ரெயிலில் அதிகளவில் இருந்தது. ரெயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகே சென்றபோது, முன்பதிவு இல்லாத பெட்டியில் படியில் நின்று பயணம் செய்த வாலிபர் தவறி தண்டவாளத்தில் விழுந்தார்.
இதனை கண்ட கார்டு வாக்கி டாக்கி மூலம் அருகில் உள்ள கேட் கீப்பருக்கு தகவல் கொடுத்தார். உடனே அந்த கேட்கீப்பர் சம்பவ இடம் விரைந்து வந்தார். ரெயில் மெதுவாக சென்றதால், அதிர்ஷ்டவசமாக ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் லேசான காயத்துடன் அங்கு நின்று கொண்டிருந்தார். பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்த அபீஷ்குமார் (வயது 19) என்பதும், சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் டிரோன் கேமரா பற்றிய படிப்புக்கு சென்றதும் தெரியவந்தது.