திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உன்னி முகுந்தன் . இயக்குனர் ஹனீப் அடேனி இயக்கத்தில் இவரது நடிப்பில் கடந்த மாதம் 20-ந் தேதி வெளியான படம் 'மார்கோ'.
இப்படத்தில் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ உள்ளிட்ட பலர் நடித்திருந்னர். ஆக்சன் காட்சிகள் நிறைந்து இருந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. உலகளவில் இப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது.
இந்நிலையில், இவ்வளவு காலம் அமைதியாக இருந்த ரியாஸ் கான், மார்கோ படத்தில் தான் நடித்த காட்சிகள் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஒரு படத்தில் இருந்து நான் நடித்த காட்சிகள் நீக்கப்படுவது ஒரு நடிகராக மிகவும் வருத்தத்தை கொடுக்கும். அதுவும் வெற்றிப் படத்திலிருந்து நீக்கப்பட்டால் அது இன்னும் வருத்தத்தை கொடுக்கும். உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு படத்தில் நான் இருந்தேன் ஆனால், இப்போது இல்லை. மார்கோ படத்தில் நான் நடித்த காட்சிகள் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டன'என்றார்.