நெல்லை: அடிதடி வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை- நீதிபதி தீர்ப்பு

2 days ago 1

கடந்த 2013-ம் ஆண்டு நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி அருகே மேலமாவடி, தெற்கு தெருவை சேர்ந்த அருள்ராஜ் 2013 செப்டம்பர் 29ம் தேதி மாவடி மெயின் ரோட்டில் உள்ள ஹோட்டல் உரிமையாளரான செல்வத்திடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த நம்பி நாராயணன் மகன்களான பொன்னுலிங்கம் (வயது 55), சங்கர் ஆகிய இருவரும் சேர்ந்து செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதை பார்த்த அருள்ராஜ் சமரசம் செய்ய முயற்சி செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த பொன்னுலிங்கம், சங்கர் ஆகிய இருவரும் சேர்ந்து அருள்ராஜை அவதூறாக பேசி கையால் சரமாரியாக தாக்கி, ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து அருள்ராஜ் திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் திருக்குறுங்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பொன்னுலிங்கம், சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (01.04.2025) இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளி பொன்னுலிங்கத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான சங்கர் என்பவர் இறந்துவிட்டார்.

இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட ஏ.எஸ்.பி. பிரசன்னகுமார் மற்றும் திருக்குறுங்குடி காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

Read Entire Article