நெருங்கும் தீபாவளி ஈரோடு கடைவீதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்

3 weeks ago 4

 

ஈரோடு, அக்.21: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில் நேற்று ஈரோடு கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஈரோடு மாநகரில் கடந்த ஒரு வாரமாக, ஜவுளி கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான ஆபரணங்கள், அலங்காரப் பொருள்கள் விற்பனை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பண்டிகைக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், விடுமுறை நாளான நேற்று ஈரோடு நகரில் உள்ள ஆர்.கே.வி.ரோடு, நேதாஜி ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீர் செல்வம் பார்க், மேட்டூர் ரோடு, மீனாட்சி சுந்தரனார் ரோடு, பெருந்துறை ரோடு உள்ளிட்ட நகரில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஜவுளி கடைகளிலும், பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள ஜவுளிக் கடைகளிலும் நேற்று காலை 9 மணி முதலே மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

ஈரோடு நகரம் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் புத்தாடைகள் வாங்க வந்திருந்ததால் மதியத்துக்கு பின்னர் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தவிர சாலையோர தற்காலிக கடைகளிலும் வியாபாரம் களை கட்டியது. இதனால், நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலைமோதிய மக்கள் கூட்டம் காரணமாக அசாம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post நெருங்கும் தீபாவளி ஈரோடு கடைவீதியில் அலைமோதிய மக்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article