நெருக்கடிக்கு பயந்து ராஜாவாக வலம் வந்த விசுவாசமிக்க அதிகாரி திடீரென ஓட்டம் பிடித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 months ago 10

‘‘இலை பார்ட்டியில பத்து பஞ்சாயத்து நிர்வாகிகளோட புலம்பல் சத்தம் அதிகமாகவே ஒலிக்குதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல பட்டுல முடியுற ஒன்றியம் இருக்குது.. இந்த ஒன்றியத்துல 48 ஊர் ஆட்சிகள் இருக்குது.. இதுல இலை பார்ட்டியில கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குன்னு 4 திசைகளாக பிரிச்சிருக்காங்க.. கிழக்கு ஒன்றியத்தோட செயலாளரு, கிரிவலம் சட்டமன்றத்தோட தொகுதிக்கு உட்பட்ட 10 பஞ்சாயத்துக்கள் சேர்த்து ஒருவருக்கு பதவி வழங்கப்பட்டிருக்குது..

இதுக்கு பார்ட்டியிலயே ஏகப்பட்ட எதிர்ப்பாம்.. வயசுல குறைஞ்ச ஆளுக்கு போய் இந்த பதவிய கொடுத்தா அவரு எப்படி கட்சி பணிய செய்வாரு, இல்ல அவருக்கு செய்யத்தான் தெரியுமான்னு கேட்டு, ஒன்றியத்துல இருக்குற நிர்வாகிங்க மாவட்டத்தோட செயலாளர் கிட்ட புகாரா சொல்லியிருக்காங்களாம்.. அதுக்கு, மாவட்டத்தோட செயலாளரு, நான் போட்ட ஆள் தான் அவரு. நல்லா வேலை செய்வாரு. நீங்கள் எல்லாம் அவர்கூட இருந்துதான் பணி செய்யணும்னு ஸ்ட்ரிட்டா சொல்லிட்டாராம்..

இதனால அந்த 10 பஞ்சாயத்து இலை பார்ட்டிங்களும் புலம்பிக்கிட்டிருக்காங்களாம்.. இந்த சத்தம் தான் அந்த ஏரியாவுல அதிகமாக கேட்டுக்கிட்டிருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஆளுமைமிக்க நிர்வாகியின் அதிரடிக்கு பயந்து ராஜாவாக இருந்த அதிகாரியே ஓட்டம் பிடிச்சிட்டாராமே…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் ராஜாவாக வலம்வந்த செயல் அதிகாரி, திடீரென ஜம்முவுக்கு ஓட்டம் பிடித்துள்ளார். விவசாயம், கால்நடை உள்ளிட்ட துறைகளில் ஆதிக்கம் செலுத்திய அந்த ராஜ அதிகாரி, வேலைவாய்ப்புகளிலும் கோலோச்சி புல்லட்சாமியின் விசுவாசமிக்கவராக உலா வந்தாராம்..

இதனால் மக்கள் நலன்சார்ந்த துறைகளும் அவருக்கு கூடுதலாக ஒதுக்கி கொடுக்கப்பட்டதாம்.. இந்த நிலையில், திடீரென ஒன்றிய அதிகாரத்தின் நேரடி தொடர்பில் இருக்கும் நிர்வாகி, ஆளுமைமிக்க பதவியில் வந்து அமர்ந்ததால் பலருக்கு கலக்கம் ஏற்பட்டதாம்.. இதன் உச்சகட்டமாக மிகுந்த எதிர்பார்ப்புடன் புதுச்சேரிக்கு ஓடோடி வந்த ராஜ அதிகாரி, தற்போது நெருக்கடிக்கு பயந்து, முன்பிருந்த இடத்துக்கே பணி மாறுதலை தானாகவே கேட்டு ஓட்டம் பிடித்து விட்டாராம்..

ஏற்கனவே தனக்கு சிக்கல் இருப்பதால், நிர்வாகியின் அதிரடிக்கு பயந்தே அவர், புல்லட்சாமி தரப்பில் போட்டப்பட்ட தடுப்புகளையும் தாண்டி திட்டமிட்டு பயணமாகி விட்டாராம்.. இதுபற்றிதான் அரசு அதிகார வட்டாரத்தில் பரவலாக பேச்சு ஓடுகிறது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘யாரு எந்த வகையில் கலெக்‌ஷன் எடுக்கிறாங்க என்பது முக்கியமில்லை. நான் கொடுத்த டார்கெட் எனக்கு வந்தாக வேண்டும் என கறாராக வசூலில் ஈடுபடுகிறாரே பிரபல பொறியாளர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கோவை மாநகராட்சி சார்பில் டெண்டர் விடுக்கப்பட்டுள்ள பல்வேறு பணிகளுக்கு, அந்தந்த பணிகள் முடிய முடிய பில் தொகை வழங்கப்படுவது வழக்கமாம்.. சம்பந்தப்பட்ட துறை கீழ்நிலை பொறியாளர் துவங்கி, தலைமை பொறியாளர் வரை அந்த பணிகள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதியில் மாநகராட்சி கமிஷனர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்.. அவருக்கு, அப்பணி மீது திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பில் தொகை பாஸ் செய்யப்படும்.. இது, வழக்கமான நடைமுறைதான்.

இதில், முக்கிய விஷயம் என்னவென்றால், பண்டிகை காலங்களில் ஒப்பந்ததாரர்கள், போனஸ் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் பில் தொகை சற்று கூடுதலாக பாஸ் செய்யப்படும்.. ஒரே நேரத்தில் பல ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகை பாஸ் செய்யப்படுவதால், மாநகராட்சி வட்டாரத்திலும், ஒப்பந்ததாரர்கள் வட்டாரத்திலும் பணப்புழக்கம் சற்று அதிகமாகவே இருக்குமாம்.. இதை பயன்படுத்தி, ஐந்து எழுத்து பெயர் கொண்ட ஒரு பிரபலமான பொறியாளர், ஒவ்வொரு ஒப்பந்ததாரரிடமும் டார்கெட் பிக்ஸ் செய்து கொடுத்து, அதன்படி தீபாவளி வசூல் செய்து வருகிறாராம்..

கீழ்நிலையில் உள்ள பொறியாளர்கள் எந்த வகையில் தீபாவளி கலெக்‌ஷன் எடுக்கிறார்கள் என்பது எனக்கு முக்கியம் அல்ல, நான் டார்கெட் பிக்ஸ் செய்து கொடுத்த தொகை, எனக்கு வந்தாக வேண்டும்னு கறாராக வசூலில் ஈடுபடுகிறாராம்.. இந்த டார்கெட் ரொம்ப ஓவரா இருக்கே…? என பல ஒப்பந்ததாரர்கள் புலம்பி தள்ளுராங்களாம்.. இதில், ஹைலைட் என்னவென்றால், இந்த அதிகாரி வேறு எங்கு இடமாறுதலாகி சென்றாலும், தீபாவளி நேரத்தில் இங்கு இடமாறுதல் கேட்டு வந்து விடுவாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி பெயரை பயன்படுத்தாமல் ஆண்டு விழா கொண்டாடிய பலாப்பழக்காரரால தொண்டர்கள் மண்டை காய்கிறார்களாமே தெரியுமா…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தனக்குத்தான் சொந்தம் என கூறி வந்த பலாப்பழக்காரர், கட்சிக்கொடியை கூட காரில் கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாரு.. தாமரை கூட்டணி சகவாசம் காரணமோ, என்னமோ… சமீப காலமாக காவி வேட்டியுடனே வலம் வருகிறார். சமீபத்தில் இலைக்கட்சியின் 53வது ஆண்டு துவக்க விழாவை, தமிழ்நாடு முழுவதும் இலைக்கட்சியினர் கோலாகலமாக கொண்டாடினாங்க…

பலாப்பழக்காரர் தரப்பினரோ கட்சியும், கொடியும் சேலத்துக்காரர் பக்கம் உள்ளதால் என்ன செய்வது என ஒரே குழப்பத்தில் இருந்தாங்க… கடைசியாக ஒரு பக்கா பிளானை ரெடி செய்தனர். பலாப்பழக்காரரின் முக்கிய ஆதரவாளர்களில் சிலர், 53வது ஆண்டு கொண்டாட்டம் காணும் கழகத்தை மீட்டெடுப்போம். அணி திரள்வோம்… பாணியில், முக்கிய ஆதரவாளர்களின் படங்களை பெரியதாக போட்டு, கட்சி பெயர், கொடியை பயன்படுத்தாமல் பிளக்ஸ் பேனர்களை பலாப்பழக்காரரின் சொந்த ஊரான பிக்பாண்ட் நகர், அவரது தொகுதி உள்பட பல இடங்களில் வைத்துள்ளனர்.

மேலும், இலைக்கட்சி நிறுவனர், தலைவிக்கு மலர் மாலைகளை போட்டு, இலைக்கட்சி பெயரை பயன்படுத்தாமலே விழாவை கொண்டாடி இருக்காங்க.. இதனால் தொண்டர்கள் மட்டுமின்றி, இலைக்கட்சியினருமே மண்டை காய்ந்துள்ளனர். ‘ஒண்ணா இணைஞ்சுட்டாங்களா… 2 தரப்பிலும் மாறி, மாறி கொண்டாடுறாங்களே’ என குழம்பி விட்டனர்…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post நெருக்கடிக்கு பயந்து ராஜாவாக வலம் வந்த விசுவாசமிக்க அதிகாரி திடீரென ஓட்டம் பிடித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article