நெரிசலில் சிக்கி தாமதமாவதை தடுக்கும் வகையில் மாநகர பேருந்துகளுக்கு சிக்னலில் முன்னுரிமை: ஆலந்தூர் – விமான நிலையம் வரை சோதனை ஓட்டம்

3 weeks ago 4

பூந்தமல்லி: நெரிசலில் சிக்கி தாமதமாவதை தடுக்கும் வகையில், மாநகர பேருந்துகளுக்கு சிக்னல்களில் முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரை ஜிஎஸ்டி சாலையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவை இயக்கப்பட்டாலும், அனைத்து இடங்களுக்கும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதால், மக்கள் பேருந்து போக்குவரத்தை அதிகளவில் நாடியுள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 659 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. 32 பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் தினமும் 33.60 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், மாநகர பேருந்துகள் நெரிசலில் சிக்கி தாமதமாவதை தடுக்கும் வகையிலும், பேருந்து பயணத்தை மேம்படுத்தும் நோக்கிலும் சிக்னல்களில் மாநகர பேருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய திட்டத்தை மாநகர போக்குவரத்து கழகம் செயல்படுத்த உள்ளது.

இதற்காக, ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரை ஜிஎஸ்டி சாலையில் முதற்கட்ட சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், மருத்துவமனை செல்வோர் உள்ளிட்ட ஏராளமானோர் மாநகர பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பல முக்கிய வழித்தடங்களில் பீக் அவர்சில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், மாநகர பேருந்துகளில் செல்லும் பயணிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

எனவே, மாநகர பேருந்துகளுக்கு சிக்னல்களில் முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மாநகர பேருந்துகளை கண்டறிந்து, சிவப்பு சிக்னலின் கால அளவைக் குறைத்து, பச்சை சிக்னல் கால அளவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநகர பேருந்துகள் சிக்னல்களில் அதிக நேரம் நிற்காமல் கடந்து செல்ல முடியும். சென்னை ஐஐடி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள மேம்பட்ட கணினி வளர்ச்சிக்கான மையம் இணைந்து மாநகர பேருந்துகளின் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

இதற்காக மாநகர போக்குவரத்து கழகம், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம், சென்னை போக்குவரத்து காவல்துறையின் பிரதிநிதிகளைக் கொண்ட திட்ட மதிப்பாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, போக்குவரத்துத் துறை மற்றும் சென்னை ஐஐடி ஆகியவை இணைந்து ரூ.82 லட்சத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக அதிகமான போக்குவரத்து உடைய மற்றும் நகரின் முக்கியமான சாலையான ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரையிலான ஜிஎஸ்டி சாலையில் இதற்கான சோதனை ஓட்டத்தை நடத்த மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

சிக்னல்களில் மாநகர பேருந்துகளுக்கு முன்னுரிமை திட்டம் மூலம் சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பிற்கு பல நன்மைகள் ஏற்படும். இதனால் பயண நேரம் குறைவதோடு, அட்டவணையின் நம்பகத்தன்மையும், எரிபொருள் திறனும் மேம்படுத்தப்படும். சிக்னல்களில் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதன் மூலம், எரிபொருள் நுகர்வு, போக்குவரத்து நெரிசல் மற்றும் கார்பன் உமிழ்வு குறையும்.  இது மக்களை அதிகளவில் பொதுப் போக்குவரத்தை தேர்வு செய்ய ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முன்முயற்சியானது பொதுப் போக்குவரத்து மற்றும் பயணிகள் பயணத்தின் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த திட்டம் ஜனவரி 2025 இறுதிக்குள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* ஜிபிஎஸ் தொழில்நுட்பம்
சென்னையில் தற்போது இயக்கப்படும் மாநகர பேருந்துகள் அனைத்திலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் வாயிலாக பயணிகளுக்கு பேருந்துகளின் வருகை நேரம் உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கிறது. பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணியும், முக்கிய சிக்னல்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியும் நிறைவடைந்துள்ளது. மாநகர பேருந்துகளில் தற்போது இந்த இயக்கவியல் மாற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

The post நெரிசலில் சிக்கி தாமதமாவதை தடுக்கும் வகையில் மாநகர பேருந்துகளுக்கு சிக்னலில் முன்னுரிமை: ஆலந்தூர் – விமான நிலையம் வரை சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article