நெய்யாற்றங்கரை கிருஷ்ணர் கோவில்

2 months ago 13

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், நெய்யாற்றங்கரையில் அமைந்துள்ள கிருஷ்ண சுவாமி கோவில், பல்வேறு சிறப்புகளை கொண்டதாக விளங்குகிறது. மரத்தில் மறைத்து வைத்து உயிரைக் காத்த கிருஷ்ணனுக்கு, மன்னன் மார்த்தாண்ட வர்மா அமைத்த ஆலயம் இது. 

யுவராஜனை காத்த பலா மரம்

திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையில் முடிசூட்டும் தகுதி, அந்த மன்னனின் சகோதரியின் வாரிசுகளுக்கே வழங்கப்படும். மன்னரின் வாரிசுகளுக்கு உரிமை இல்லை. மன்னர் அனுஷம் திருநாள் காலத்தில் யுவராஜாவாக இருந்தவர், மார்த்தாண்ட வர்மா. அப்போது மன்னர் குடும்பத்தில் குழப்ப சூழ்நிலை இருந்தது. அதேநேரம் திருவிதாங்கூர் மன்னர்களுக்கு பகைவர்களாக விளங்கிய எட்டுவீட்டு பிள்ளைமார்கள், யுவராஜனை கொல்ல திட்டமிட்டனர்.

இதனால் யுவராஜா மிகவும் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார். அவ்வப்போது மாறுவேடத்தில் வெளியில் செல்ல வேண்டியிருந்தது. ஒரு சமயம் நெய்யாற்றங்கரைப் பகுதிக்கு வந்தபோது, பகைவர்கள் கொடிய ஆயுதங்களோடு இவரைப் பின்தொடர்ந்தனர். யுவராஜா அவர்களிடம் இருந்து தப்பிக்க ஒடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், நிலையை உணர்ந்து, அருகில் இருந்த பலாமரத்தின் பொந்தில் யுவராஜாவை மறைந்து கொள்ளச் சொன்னான். யுவராஜாவும் மறைந்து கொண்டார். பகைவர்கள் அந்த இடம் வந்ததும், சிறுவனை விசாரித்தனர். சிறுவன் வேறு திசையைக் காட்டி மன்னரைக் காத்தான். மன்னர் உயிர் பிழைக்க வைத்த அந்த மரத்தை 'அம்மச்சி பிலா'என்று அழைத்தனர்.

யுவராஜனாக இருந்த மார்த்தாண்டவர்மா, பல தடைகளைக் கடந்து மன்னனாக முடிசூட்டிக் கொண்டார். ஆனால் அவருக்கு தன்னைக் காத்த மரமும், சிறுவனும் மறந்துபோயினர். இதற்கிடையில் மன்னன் மார்த்தாண்ட வர்மா, தன் எதிரிகளான எட்டு வீட்டுப்பிள்ளைமார்கள் வம்சத்தை பூண்டோடு அழித்தார். ஒரு நாள் கனவில் தோன்றிய கிருஷ்ணர், "அன்று மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து உன் உயிர் காத்தது நான்தான். என்னை மறந்து விட்டாயே. இனியும் தாமதிக்காமல் எனக்கு ஒரு ஆலயம் எழுப்பு" என்றார்.

புனித மரம்

தன் தவறை உணர்ந்த மன்னர், தன் உயிர்காத்த அந்த மரத்தையே ஆதாரமாக வைத்து, ஆலயம் எழுப்ப தீர்மானித்தார். அருகேயுள்ள ஒரு ஊரில் சிலை உருவாக்கப்பட்டது. கல்லால் உருவான அந்தக் கிருஷ்ணன் சிலையை அவ்வூரில் இருந்து படகில் ஏற்றி வந்தனர். ஆனால் அச்சிலையோ ஆலயம் வர விரும்பாமல் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது. பிரசன்னம் பார்த்தபோது 'ஐம்பொன் சிலையே வேண்டும்' என உத்தரவு வந்தது. அதன்படியே ஒன்றரை அடி உயர ஐம்பொன் சிலை வடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அச்சிலை, மன்னரின் கனவில் கிருஷ்ணர் தோன்றிய வடிவில் அமைக்கப்பட்டது. இவரே இன்று நெய்யாற்றங்கரை ஸ்ரீகிருஷ்ணசுவாமி என அழைக்கப்படுகிறார். கி.பி. 1755-ம் ஆண்டில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மன்னரைக் காத்த அந்த பலா மரத்தின் அடிப்பாகம் இன்றும் புனித மரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆலய அமைப்பு

தேசிய நெடுஞ்சாலையின் வளைவில் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. உயரமான நுழைவு வாசலின் மேற்புறத்தில் கீதை உபதேசக் காட்சி, சுதை வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. நீண்ட நடைப்பந்தல், அடுத்து தங்கக் கொடிமரம் வரவேற்கின்றது. பலிக்கல், நமஸ்கார மண்டபம், படிகள், கதவுகள், சுவர்கள் அனைத்தும் பித்தளைத் தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளன. 'ஸ்ரீகோவில்' எனப்படும் கருவறையானது, சதுர வடிவில் அமைந்துள்ளது. கருவறை செம்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளது.

கருவறைக்குள் ஒன்றரை அடி உயர பஞ்சலோக கிருஷ்ணன் மேற்கு முகமாக காட்சி தருகின்றார். இரு கைகளிலும் வெண்ணெய் உருண்டைகள் தாங்கி, விரித்த தலைமுடியுடன் காட்சி கொடுக்கிறார். கருவறையை சுற்றிலும் சித்திர வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.

வேட்டைக்கு ஒரு மகன், தர்மசாஸ்தா, நடராஜர், ராமர் பட்டாபிஷேகம், நரசிம்மர், கணபதி, மகாலட்சுமி, கிராத மூர்த்தி படங்கள் உள்ளன. இந்த ஆலயத்தில் கிருஷ்ணன் மீது சாத்திய வெண்ணெய், நோய் தீர்க்கும் அருமருந்தாக கருதப்படுகிறது.

இந்த ஆலயத்தில், பங்குனி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. புரட்டாசி நவராத்திரியும் நல்லமுறையில் கொண்டாடப்படுகிறது.

அமைவிடம்

திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, நெய்யாற்றங்கரை. இங்கு செல்ல கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ் மற்றும் ரெயில் வசதிகள் உள்ளன.

Read Entire Article