
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கடற்கரை பகுதியில் தமிழ்நாடு அரசின் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 400 எம்.எல்.டி. அளவுள்ள புதிய குடிநீர் ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளுக்காக நெம்மேலி கடற்கரையில் சுமார் 1,500 மீட்டர் நீளமுள்ள குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று காலை கடல் சீற்றம் காரணமாக அந்த குழாய்கள் கரை ஒதுங்கின.
இதையடுத்து குடிநீர் வாரிய பொறியாளர்கள் விரைந்து சென்று ஜே.சி.பி. உதவியுடன் குழாய்களை கரைகளில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கடல் சீற்றம் காரணமாக இந்த பணியை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதற்கிடையில், கடற்கரையில் சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு ராட்சத குழாய்கள் கரை ஒதுங்கியதால் நெம்மேலி பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.