நெடுஞ்சாலையில் ஆபத்தான மின்மாற்றி அகற்றும் பணி

1 month ago 4

 

கொள்ளிடம்,நவ.19: கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் ஆபத்தான மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை தினகரன் செய்தி எதிரொலியாக அகற்றி புதிதாக அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலிருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் ஆச்சாள்புரத்தில் மின் மாற்றி அமைந்துள்ளது. இந்த மின்மாற்றி மிகவும் புகழ்பெற்ற அங்காளம்மன் கோயில் வாசல் முன் பகுதியில் அமைந்துள்ளது. அதன் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. மக்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் முக்கிய நெடுஞ்சாலை ஓரத்திலும் வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் சாலையின் முக்கிய பகுதியிலும் மின்மாற்றி அமைந்துள்ளது.இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதில் உள்ள இரண்டு மின் கம்பங்களும் எந்த நேரமும் அடியோடு முறிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது.

இந்த மின் கம்பங்கள் முறிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்துவதற்கு முன்பாக உடனடியாக அகற்றுவதுடன் மின்மாற்றியை இடமாற்றம் செய்து சற்று தூரத்தில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளிட்டது. இந்நிலையில் மின்சார வாரிய அதிகாரிகள் உடைந்து விழும் நிலையில் இருந்து வரும் இரு மின்கம்பங்களையும் அகற்றி விட்டு புதிய மின் கம்பங்களை புதைத்து புதிய இயந்திரங்களையும் பொறுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு உரிய இடம் கிடைக்காததால் தற்போது இருந்த இடத்திலேயே மின்மாற்றியை பாதுகாப்பாக அமைத்து தர அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டது. உரிய நேரத்தில் செய்தி வெளியிட்டு உடைந்து விழும் நிலையில் இருந்த மின்மாற்றியை மாற்ற நடவடிக்கை எடுத்த தினகரன் இதழுக்கு அப்பகுதி கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post நெடுஞ்சாலையில் ஆபத்தான மின்மாற்றி அகற்றும் பணி appeared first on Dinakaran.

Read Entire Article