தமிழர்களின் வாழ்வியலிலும், கலாச்சாரத்திலும் பல தலைமுறைகளாக பின்னிப் பிணைந்துள்ள பெருமைமிகு பொருட்களைப் பட்டியலிட்டால் பாய்க்கென்று ஒரு தனியிடத்தைத் தந்தே வேண்டும். வாழ்வியல் என்று எடுத்துக்கொண்டால் பிறந்த குழந்தையைப் உறங்க வைப்பது முதல் வயது மூப்பின்போது கடைசி தருணங்களைக் கழிப்பது வரை பாயோடுதான் நமது பந்தம் தொடர்கிறது. கலாச்சாரமும் அப்படித்தான். குழந்தைகளுக்கு மொட்டையடித்து, காதுகுத்துவது தொடங்கி திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் வரை பாயுடனான பயணம் நீள்கிறது. பாய்களின் பயன்பாட்டைப் போலவே, அவற்றை உருவாக்கித் தரும் ஊர்களைப் பற்றியும் சில சுவாரஸ்யங்கள் நிரம்பி இருக்கின்றன.
திருநெல்வேலி பத்தமடை, கரூர், கொள்ளிடம் தைக்கால்… இந்த ஊர்கள்தான் பாய் தயாரிப்புக்கும், கோரை உற்பத்திக்கும் பேர் போனவை. இதில் கொள்ளிடம் தைக்காலானது கோரை சாகுபடி, பாய் தயாரிப்பு என இரண்டுக்கும் பேர் பெற்ற ஊராய் விளங்குகிறது. இந்த இரண்டையும் இரண்டு தலைமுறைகளாக செய்து வரும் கொள்ளிடம் தைக்காலைச் சேர்ந்த ஹாலித் பாஷாவைச் சந்தித்தபோது கொள்ளிடத்தின் கோரை வரலாறு தொடங்கி இன்றைய பாய் வியாபாரம் வரை பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“கொள்ளிடம் தைக்காலுக்கும் பாய் உற்பத்திக்கும் 100 ஆண்டுகளுக்கும் மேலான பிணைப்பு. கரூரில் உள்ள ஆறுகளில் வளர்ந்து கிடக்கும் கோரைப்புற்களை அறுத்து வந்து கையால் பாய் தயாரித்ததுதான் கொள்ளிடத்தின் ஆரம்ப கால பாய் வரலாறு. பின்பு இங்குள்ள கொள்ளிடம் ஆற்றில் வளர்ந்து கிடக்கும் கோரைகளையே இதற்கு பயன்படுத்தினார்கள். 1985ல் பவர் லூம் வந்த பிறகு ஆற்றில் விளையும் கோரைகள் போதவில்லை. இதனால் பாய் உற்பத்தியாளர்கள் நெற்பயிரைப் போல கோரையைப் பயிர்செய்ய ஆரம்பித்தார்கள். கோரைக்கு விலை இருப்பதைப் பார்த்து பல விவசாயிகளும் கோரை விளைவிக்க ஆரம்பித்தார்கள். கொள்ளிடம் பகுதி கோரை விளையும் பகுதியானது. கொள்ளிடத்தைச் சுற்றியுள்ள ஓலையாம்புத்தூர், குன்னம், மாத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட பல கிராமங்களின் வயல்களில் கோரை செழித்து வளர்ந்தன. அவ்வாறு கோரை விளைவித்தவர்தான் எங்களது தந்தையும். அவர் கோரைகளை விளைவித்ததோடு, பாய் உற்பத்தியிலும் ஈடுபட்டார். அந்த வழியில் நானும் பயணிக்கிறேன்’’ என நூற்றாண்டு வரலாற்றைக் கண்முன் கொண்டு வந்த ஹாலித் பாஷா கோரை சாகுபடி குறித்தும் குறிப்புகள் தந்தார். “கோரையை சாகுபடி செய்ய முதலில் நிலத்தை நன்றாக உழுது சேறாக்க வேண்டும். அதுவும் நாள்பட்ட சேறாக (பல நாட்களுக்கு சேறு பதமாகவே இருப்பது) மாற வேண்டும். அந்த பதத்தில் உள்ள சேற்றில்தான் கோரை விதைக்கிழங்குகளை நடவு செய்வோம்.
கொள்ளிடம் ஆற்று வாய்க்காலில் செழிப்பாக வளர்ந்து நிற்கும் கோரைப்புற்களின் அடியில் உள்ள கிழங்குகளைத்தான் விதைக்காக சேகரிப்போம். அவற்றை புல்லோடு 2 அடி சேர்த்து, முக்கால் அடி இடைவெளியில் ஒவ்வொன்றாக நட்டு சீரான அளவில் பாசனம் செய்வோம். நிலத்தைக் காயவிட்டால் களை அதிகளவில் வரும். அதிக பாசனம் கொடுத்தால் தூர்கள் கிளைத்து வெடிக்காது. மாதம் ஒருமுறை களையெடுத்து டிஏபி, பாக்டம்பாஸ், யூரியா ஆகியவற்றைக் கலந்து கையால் தெளிப்போம். இவ்வாறு செய்து வர 10வது மாதத்தில் முதல் அறுவடையை மேற்கொள்வோம். அதாவது தரையோடு சேர்த்து கோரைப்புற்களை அறுப்போம். அறுவடை முடிந்த பிறகு வயலில் உள்ள சருகுகளைக் கூட்டி கொளுத்தி நிலத்தை சுத்தம் செய்வோம். இவ்வாறு செய்வதால் வயலுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். பின்புநிலத்திற்கு நீர்பாய்ச்சி களையெடுப்போம். 2 மாதத்திற்கு ஒருமுறை களையெடுத்து உரமிடுவோம். முதல் அறுவடைக்குப் பிறகான 4வது மாதத்தில் கோரைப்புற்கள் நன்கு வளர்ந்து நிலத்தை மூடிவிடும். இதனால் களைகள் முளைக்காது. உரம், பாசனம் மட்டும் கொடுத்தால் போதும். 15 நாளுக்கு ஒருமுறை பாசனம் செய்வது அவசியம். 2வது அறுவடையை 6 மாதத்திமேற்கொள்ளலாம். இதேபோல 6 மாதத்திற்கு ஒருமுறை 15 ஆண்டுகள் வரை அறுவடை எடுக்கலாம். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு 3 முறை மட்டுமே கோரை அறுவடை செய்ய முடியும். மழைக்காலங்களில் கோரை அறுவடை செட் ஆகாது. அறுவடை செய்த கோரைகளை வெயிலில் நன்றாக உலர்த்த வேண்டும் என்பதால் இந்த இடைவெளிவிழுந்துவிடும்.
முதல் இரண்டு ஆண்டு அறுவடைகளின்போது தூர் சரியாக வெடிக்காமல், குறைந்த அளவிலேயே கோரைகள்மகசூலாக கிடைக்கும். 3வது வருடத்தில் இருந்து ஒரு அறுவடையில் 60 முதல்80 கட்டுகள் வரை கோரை கிடைக்கும். 18 அங்குலம் சுற்றளவுக்கு கோரைகளைச் சேர்த்து கட்டுவது ஒரு முடி. இதுபோன்ற 4 முடி சேர்ந்ததுதான் ஒரு கட்டு. இந்தக் கட்டுகள் ஒவ்வொன்றும் ரூ.800 முதல் ஆயிரம் வரை விலைபோகும். சராசரி விலை ரூ.900. அதில் ஒரு கட்டுக்கு ரூ.600 வரை செலவாகும். அதுபோக கட்டுக்கு ரூ.300 லாபமாக கிடைக்கும். ஏக்கருக்கு சராசரியாக 70 கட்டுகள் கிடைத்தால் ஏக்கருக்கு ரூ.21 ஆயிரம் லாபமாக கிடைக்கும். 2 வருடங்களில் கிடைக்கும் 3 அறுவடைகள் மூலம் 63 ஆயிரம் லாபம் கிடைக்கும். சில நேரங்களில்கட்டுகளும், விலையும் கூடுதலாக கிடைத்து லாபத்தொகையும் அதிகரிக்கும். அது தலைகீழாகவும் மாறும்.இதை நிச்சய லாபம் தரும் தொழிலாக மாற்றத்தான் பாய் உற்பத்தியில் ஈடுபடுகிறோம். அறுவடை செய்த கோரைப்புற்களை தனித்தனியே பிரித்து, மெஷினில் கொடுத்து இரண்டாக கிழிப்போம்.
பின்னர் அவற்றை உலர வைத்து 20 நாட்களுக்கு படிய வைப்போம். பின்பு அவற்றை பாய் பின்னும் கூடத்திற்கு எடுத்து வந்து பெருவெட்டு, நைஸ் என தரம்பிரித்து சங்காயத்தை (தோல் பகுதி) நீக்கி திரும்பவும் படிய வைப்போம். அதன்பிறகு கோரைகளை அடுக்கி, தேவைக்கேற்ப சாயத்தில் நனைத்து, அடியிலும் நுனியிலும் கொஞ்சமாக நறுக்கி மெஷினில் கொடுத்து பாய் பின்ன ஆரம்பிப்போம். இவை அனைத்தும் நூல் பாய்தான். நன்கு உழைக்கும். 4 அடி அகலம், 6 அடி நீளம் கொண்டிருக்கும். நன்றாக படுத்து உறங்கலாம். ஒரு கட்டு கோரையில் 15 பாய்கள் வரை கிடைக்கும். ஒரு பாயை ரூ.150 முதல் ஆயிரம் வரை கூட விலை வைத்து விற்கலாம். வேலைப்பாடுகளைப் பொறுத்தது அது. குறைந்தபட்சம் ரூ.150க்கு விற்றாலே ஒரு கட்டு கோரை மூலம் தயாரிக்கப்படும் பாய்களின் மூலம் ரூ.2250 வருமானமாக கிடைக்கும். ஒரு ஏக்கரில் கிடைக்கும் 70 கட்டுகள் மூலம் ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் வருமானம் கிடைக்கும். செலவுகள் போக ஒரு அறுவடையில் ரூ.70 ஆயிரம் வரை வருமானம் பார்க்கலாம். 3 அறுவடைகள் மூலம் ரூ.2 லட்சம் வரை லாபம் பார்க்கலாம்’’ என புள்ளிவிவரங்களோடு தெரிவித்தார்.
தொடர்புக்கு:
ஹாலித் பாஷா: 80980 98842.
பத்தமடை பாய்கள் கைகளால் பின்னப்படுவதாலும், வேலைப்பாடுகள் நிறைந்திருப்பதாலும் இது கொஞ்சம் காஸ்ட்லி. கொள்ளிடம் பாய்கள் பவர் லூம் தயாரிப்பு என்பதால் எல்லோரும் எளிதாக வாங்கிப் பயன்படுத்தும் பாய் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.
கரூரில் விளையும் கோரைகள் மொத்தமான அளவில் இருக்கும். இவற்றின் உள்ளிருக்கும் சோறு போன்ற அமைப்பு தடிமனாக இருப்பதால் தண்ணீரை உள்வாங்கி பாய்கள் விரைவில் வீணாகிவிட வாய்ப்பு ஏற்படும். கொள்ளிடத்தில் வளரும் பாய்களோ சன்ன ரகம். இவை தண்ணீரை குறைந்தளவே உறிஞ்சுவதால் நீண்ட நாட்களுக்கு உழைக்கும் என்கிறார்கள்.
கிழக்குக்கடற்கரை சாலை வழியாக டெல்டா பகுதிகளுக்கும், பிற பகுதிகளுக்கும் செல்பவர்கள் கொள்ளிடத்தில் விற்பனையாகும் பாய்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள். இப்போதுபை பாஸ் சாலை போடப்பட்டிருப்பதால் பாய் விற்பனை டல்லடிக்கிறது. இதனால் அரசு சார்பில் கோரை சாகுபடி, பாய் விற்பனை போன்றவற்றுக்கு சலுகைத், திட்டங்கள் அறிவிக்கக் கோருகிறார்கள் கோரை விவசாயிகள்.
The post நூற்றாண்டு பெருமை பேசும் கொள்ளிடத்துக் கோரைகள்! appeared first on Dinakaran.