கர்நாடக மாநிலம் பெல்காமில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு 1924ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி மகாத்மா காந்தி தலைமையில் நடந்தது. இம்மாநாடு நடந்து நூறாண்டு நிறைவடைந்து விட்டது. இந்த நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அங்கு இரண்டு நாள் மாநாட்டை நடத்த திட்டமிட்டது. அதன்படி அப்போது பெல்காம் என்று இருந்து தற்போது பெலகாவி என்று பெயர் மாற்றப்பட்டுள்ள இடத்தில் காங்கிரஸ் கமிட்டியின் இரண்டு நாள் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தி, எம்பிக்கள், முன்னணி தலைவர்கள் உள்பட 200 முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
நூற்றாண்டு காங்கிரஸ் காரிய கமிட்டியின் நிறைவை நினைவுபடுத்தும் வகையில் பெலகாவியில் உள்ள சுவர்ண விதானசவுதா முன்பு காந்தி உருவப்படத்தை முதல்வர் சித்தராமையா திறந்துவைத்தார். இந்த கூட்டத்தில், ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர். ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், தேர்தல் ஆணைய சட்டத்தில் கொண்டுவந்துள்ள திருத்தம் குறித்து ஆலோசனை நடத்தி இதற்கு எதிராக போராட்டத்தை வலுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வியூகம் அமைக்க இருக்கின்றனர்.
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அவதூறு பேசிய அமித்ஷாவை கண்டித்தும், அவர் தனது உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவும், மன்னிப்பு கோர வலியுறுத்தியும் தீர்மானம் கொண்டுவர இருக்கின்றனர். அடுத்த ஆண்டுக்கான காங்கிரசின் செயல் திட்டம் குறித்து முடிவு செய்கின்றனர். மேலும், ஒன்றிய பாஜ ஆட்சியில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, ஜனநாயகத்தின் சீரழிவு, பொதுத்துறை நிறுவனங்கள் மீதான தாக்குதல் போன்ற சவால்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
நாளை நடக்கும் இரண்டாவது நாள் கூட்டத்தில், ‘ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான்’ என்ற பேரணி அதற்கு ‘நவ சத்தியாகிரக சந்திப்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில், அரியானா, ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில், அரியானா, மகாராஷ்டிராவில் ஏற்பட்ட தோல்வி குறித்தும், டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி பாஜவை தீர்க்கமாக எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி தலைமையேற்று நடந்த ஒரே தேசிய காங்கிரஸ் மாநாடு பெலகாவியில் நடந்தது தான். இதனால் அதன் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
The post நூற்றாண்டு நினைவு மாநாடு appeared first on Dinakaran.