நூற்றாண்டு கால கோரிக்கை நிறைவேற்றம் மலைக்கிராமங்களுக்கு தார் சாலை வசதி

4 weeks ago 5

*பழங்குடியின மக்கள் அரசுக்கு பாராட்டு

சத்தியமங்கலம் : தாளவாடி மலைப்பகுதி தலமலை ஊராட்சிக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு பழங்குடியின மக்களின் பல நூறு ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நவீன யுகத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு சார்பில் உடனுக்குடன் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. நகர்பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் சாலைவசதி, குடிநீர் வசதி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மக்களின் தேவையை அரசு பூர்த்தி செய்து வருகிறது.

இருப்பினும் நூறு ஆண்டுகளாக தங்களது கிராமத்திற்கு தார் சாலை வசதியே ஏற்படுத்தப்படாததால் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் தினமும் கரடு முரடான மண் பாதையில் பயணிக்க வேண்டிய நிலை இருந்ததை அடியோடு மாற்றி தார் சாலை அமைத்து பழங்குடியின மக்களின் கோரிக்கையும் நிறைவேற்றி தந்துள்ளது பழங்குடி மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தலமலை ஊராட்சியில் அடர்ந்த வனப்பகுதியில் ராமரணை,மாவநத்தம்,காளிதிம்பம்,இட்டரை,தடசலட்டி ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் முழுவதும் பழங்குடியின மக்களே வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம்,கால்நடை வளர்ப்பு,வனப்பொருள் சேகரிப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமங்களுக்கு திம்பம் – தலமலை வனச்சாலை வழியாக பயணித்து பஸ் நிறுத்தத்தில் இறங்கி காளிதிம்பம் கிராமத்திற்கு 1.5 கி.மீ தூரமும், இட்டரை மற்றும் தடசலட்டி கிராமங்களுக்கு 4 கி.மீ தூரமும், ராமரணை கிராமத்திற்கு 1 கி.மீ தூரமும் கரடு முரடான மண் பாதையில் நடந்து செல்ல வேண்டும்.

இந்த வனப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பழங்குடி இன மக்கள் தினமும் அச்சத்துடனே கரடுமுரடான மண் பாதையில் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

மேற்கண்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களது கிராமத்திற்கு தார் சாலை அமைத்து தர வேண்டும் என நூறு ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். புலிகள் காப்பகம் வனப்பகுதி என்பதால் சாலைகள் அமைப்பதற்கு வனத்துறை மூலம் தேசிய புலிகள் ஆணையத்திடம் தடையின்மை சான்று பெற வேண்டும் என்பதால் இந்த கிராமங்களில் திட்ட பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டு மண் சாலை மட்டுமே அமைக்கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டதால் ஓரிரண்டு ஆண்டுகளிலேயே மண்சாலை காணாமல் போய்விட்டது.

இந்நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி எம்பி ஆ.ராசா பழங்குடியின கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பெருமுயற்சி மேற்கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வனத்துறையிடமிருந்து தார் சாலை அமைக்க தடையின்மை சான்று பெறப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ராமரணை கிராமத்திற்கு ரூ.51.45 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டது. இதே திட்டத்தில் காளி திம்பம் கிராமத்திற்கு ரூ.1.05 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும் மாவநத்தம் வன கிராமத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் ரூ.86 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இட்டரை மற்றும் தடசலட்டி கிராமங்களுக்கு 4 கி.மீ தூரம் தார் சாலை அமைக்க வனத்துறையிடமிருந்து தடையின்மைச் சான்று பெறப்பட்டுள்ளது. விரைவில் இச்சாலை அமைக்க நிதி பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என துறை சார்ந்த அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே காளி திம்பம் கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதே போல் ராமரணை மற்றும் மாவநத்தம் கிராமங்களில் முடிவுற்ற தார் சாலை பணிகளை ஆய்வு செய்தார்.

பழங்குடியின மக்கள் தங்களது கிராமங்களுக்கு தார் சாலை வசதி ஏற்படுத்தி தர மாட்டார்களா என ஏங்கிய நிலையில் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக மலை கிராம மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக தலமலை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பழங்குடியின கிராமங்களுக்கு வனத்துறையிடம் அனுமதி பெற்று தார் சாலை அமைத்து தந்த தமிழக முதலமைச்சருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பழங்குடியின மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.

The post நூற்றாண்டு கால கோரிக்கை நிறைவேற்றம் மலைக்கிராமங்களுக்கு தார் சாலை வசதி appeared first on Dinakaran.

Read Entire Article