அதிமுக ஆட்சிக்காலத்தில் மோசடியில் ஈடுபட்ட 3 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்!

1 hour ago 3

மதுரை: மதுரை சிறையில் கைதிகள் தயாரித்த பொருட்களில் போலி ரசீது தயாரித்து, 2016 முதல் 2021 வரை ரூ.1.63 கோடி மோசடி செய்த வழக்கில் சிறைத்துறை எஸ்.பி., ஏடிஎஸ்பி உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மத்திய சிறையில் கைதிகள் மூலம் ஸ்டேஷனரி, இனிப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இவற்றை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு அனுப்பியதாக போலி ரசீது தயாரித்து பல கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளதாக கடந்த 2021ல் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த மோசடி தொடர்பாக இந்திய கணக்கு தணிக்கை துறை ஆய்வு மேற்கொண்டது. அதன்படி 2017-18, 2018-19 ஆகிய நிதி ஆண்டுக்கான வரவு, செலவுகளை தணிக்கை செய்யும் வகையில் மதுரை மத்திய சிறை நிர்வாகத்திடம் தணிக்கை துறை பதிவேடுகளை கோரியது. ஆனால், இந்த பதிவேடுகளை தணிக்கை துறையிடம் சிறை நிர்வாகம் வழங்கவில்லை. இதன் காரணமாக மதுரை மத்திய சிறை கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் ஊழல் நடந்துள்ளதா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை என தணிக்கைத்துறை தெரிவித்தது.

அதே வேளையில் பொருட்களை தயாரிப்பதற்காக ரூ.1.51 கோடி மதிப்பிலான மூல பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்பட்ட நிறுவனங்களின் ஜிஎஸ்டி அறிக்கைகளை ஆய்வு செய்தது. இதில் அந்நிறுவனங்கள் மூலம் சிறைத்துறைக்கு மூலப்பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும், புள்ளியியல் துறை தரவுகளின்படி அந்த பொருட்களின் நடப்பு சந்தை மதிப்பு ரூ.14.35 கோடி என்பதையும் தணிக்கை துறை சுட்டிக்காட்டியது.

இதுதொடர்பாக சிறைத்துறை உயர் அதிகாரிகள் விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தின் விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தணிக்கை துறை பரிந்துரைத்தது. இதையடுத்து முறைகேடு தொடர்பாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் தீவிர விசாரணை நடத்தினார்.

விசாரணை முடிவில், மதுரை மத்திய சிறை எஸ்பியாக இருந்த ஊர்மிளா, கூடுதல் எஸ்பியாக இருந்த வசந்தகண்ணன், நிர்வாக அதிகாரி தியாகராஜன், தனியார் துறையை சேர்ந்த வி.எம்.ஜாபர்கான், முகம்மதுஅன்சாரி, முகம்மதுஅலி, சீனிவாசன், சாந்தி, சரவணசுப்பு, தனலட்சுமி மற்றும் வெங்கடேஸ்வரி ஆகியோர் மீது 120(பி) 467, 468, 411, 167, 409 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தற்போது இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இவர்கள் மீதான குற்றம் உறுதிசெய்ப்பட்ட நிலையில், மதுரை சிறையில் பணியாற்றிய, புதுக்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, பாளையங்கோட்டை சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன், வேலூர் சிறை நிர்வாக அதிகாரி தியாகராஜன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

The post அதிமுக ஆட்சிக்காலத்தில் மோசடியில் ஈடுபட்ட 3 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்! appeared first on Dinakaran.

Read Entire Article