நூறுநாள் வேலை வழங்கக் கோரி யூனியன் அலுவலகம் முற்றுகை

3 days ago 4

சாயல்குடி,ஏப்.25: கே.கருங்குளம் பஞ்சாயத்தில் நூறு நாள் வேலை வழங்கவில்லை என கூறி, யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். கடலாடி ஊராட்சி ஒன்றியம், கே.கருங்குளம் பஞ்சாயத்தில் உள்ள கே.கருங்குளம், பூதங்குடி, கே.கரிசல்குளம், இந்திரா நகர், நேதாஜி நகர், சமத்துவபுரம், ரைஸ்மில் தெரு ஆகிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிராமங்களில் பஞ்சாயத்து சார்பாக நடக்கும் நூறுநாள் வேலை திட்டத்தில் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில வாரங்களாக முறையாக வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் வேலை வழங்கக்கோரி நேற்று கடலாடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து பணியாளர்கள் கூறும்போது, கே.கருங்குளம் பஞ்சாயத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சில வாரங்களாக முறையாக வேலை வழங்கவில்லை. தற்போது ஏப்ரல் மாதத்தில் புதிய நிதியாண்டுக்குரிய பணியும் வழங்கவில்லை. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்டால், புதிய வேலைக்கு நிர்வாக அனுமதி வரவில்லை என கூறுகின்றனர். கோடைக்காலம் என்பதால் விவசாய வேலை கிடையாது. இந்தநிலையில் நூறுநாள் வேலையின்றி போதிய வருமானம் இல்லை. இதனால் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே ஏழை மக்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்காக வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post நூறுநாள் வேலை வழங்கக் கோரி யூனியன் அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Read Entire Article