நுகர்வோர் மன்றத்தின் நோக்கமும் செயல்பாடுகளும்!

3 weeks ago 7

பிறந்தது முதல் நமது வாழ்நாள் முழுவதும் நாம் அனைவரும் நுகர்வோரே. இந்தியக் குடிமகன் என்கின்ற முறையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், இன்னும் பல சட்டங்களின் மூலம் நமக்கு நிறைய உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் என்கின்ற முறையில் நமது உரிமைகள் எவை என உங்களுக்குத் தெரியுமா? பொருளோ அல்லது சேவையோ தரமற்றதாக இருந்தால் நமது உரிமையை எவ்வாறு நிலை நிறுத்துவது என்பது குறித்து தெரியுமா?அத்தகைய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடங்கப்பட்டதுதான் நுகர்வோர் மன்றங்கள். நுகர்வோர் மன்றங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

நுகர்வோர் மன்றங்களின் நோக்கம்

இளைஞர்களிடையே நுகர்வோர் உரிமைகள் குறித்த அறிவையும் திறமைகளையும் உருவாக்குவது, பொருட்களின் தரக்கட்டுப்பாடு விதிகள் மற்றும் சந்தை அறிவுபற்றிக் கற்றுக் கொடுப்பது, நுகர்வோர் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த சட்டங்களைப் பயிற்றுவிப்பது, சட்டவிரோதமான வணிகமுறைகளில் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பது குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பது, நிலைத்த தன்மை வாய்ந்த நுகர்வு முறைகளைப் பயிற்றுவிப்பது, இளைஞருடைய அறிவார்ந்த வாங்கும் திறனை மேம்படுத்துவது ஆகியவையே நுகர்வோர் மன்றங்களின் பிரதான நோக்கம் ஆகும்.

நுகர்வோர் மன்றங்களின் குறிக்கோள்கள்

சுதாரிப்பான, விழிப்பான, நுகர்வோர்களை உருவாக்குதல். நேர்மையான, பொறுப்பான, நியாயமான வியாபாரிகளை உருவாக்குதல் போன்றவையே நுகர்வோர் மன்றங்களின் முக்கியக் குறிக்கோள்கள் ஆகும்.

நுகர்வோர் மன்றங்களை அமைக்கும் முறை

நுகர்வோருக்குத் தரமான பொருட்கள், சேவைகள் சென்று சேர இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மற்றும் அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களிலும் இத்தகைய மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஒரு மன்றத்திற்கு 50 மாணவ உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளலாம். உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு கிடையாது.

பள்ளிகளில் ஆறாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் உறுப்பினர்கள் ஆகலாம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் நுகர்வோர் பாதுகாப்பில் ஈடுபாடு உள்ள ஒரு ஆசிரியர் அல்லது பேராசிரியர் மன்றத்தை வழிநடத்துவார்.

நுகர்வோர் மன்றங்களின் செயல்பாடுகள்

ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை பள்ளி வேலை நேரம் முடிந்த பின் மன்றத்தின் மாதாந்திரக் கூட்டம் மற்றும் விளக்கங்கள் ஒரு மணி நேரத்திற்கு நடத்தப்பட வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள் கொண்டாடப்பட வேண்டும். வருடத்தில் குறைந்தது நான்கு நாட்களில் மன்ற உறுப்பினர்களை உள்ளூர் சந்தைகளுக்கும் மற்றும் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கும் அழைத்துச் சென்று பார்வையிடச் செய்ய வேண்டும்.

உள்ளூர் வசிப்பிடங்களில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான நாடகங்கள், வீதி நாடகங்கள் (ஸ்ட்ரீட் ப்ளே ),செயல்முறை விளக்கங்கள், வீடியோ படக் காட்சி போன்றவை நடத்தப்பட வேண்டும். நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பான செய்தி பலகை (நோட்டீஸ் போர்டு) பள்ளி/ கல்லூரியில் நிறுவி நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான செய்திகளை விளம்பரப்படுத்த வேண்டும்.

நுகர்வோர் உரிமைகள்

அறிந்திரு, விழித்திரு, செயல்படு என்பதே நுகர்வோர் மன்றங்களின் தாரக மந்திரம் ஆகும். நுகர்வோரின் உரிமைகளாக ஐக்கிய நாடுகள் சபை மூலம் சில சட்ட திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி நுகர்வோருக்கான உரிமைகள் எட்டு வகைப்படும். பாதுகாப்பிற்கான உரிமை, தகவல் பெறுவதற்கான உரிமை,விருப்பத்திற்கான உரிமை, பிரதிநிதித்துவத்துக்கானஉரிமை, குறைதீர்ப்பதற்கான உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, சுகாதாரமான சுற்றுச் சூழலுக்கான உரிமை, அடிப்படை தேவைகளுக்கான உரிமை ஆகியவையே நுகர்வோருக்கான உரிமைகள் ஆகும்.

கொண்டாடப்படும் முக்கிய தினங்கள்

உலக நுகர்வோர் தினம் (மார்ச் 15), தேசிய நுகர்வோர் தினம் (டிசம்பர் 24), உலக எழுத்தறிவுத் தினம் (செப்டம்பர்8), உலக தரக் கட்டுப்பாட்டுத் தினம் (அக்டோபர் 14), உலக உணவுத் தினம் (அக்டோபர் 16), தகவல் தொழில்நுட்பத் தினம் (நவம்பர் 21), மனித உரிமைகள் தினம் (டிசம்பர் 10) போன்ற நாட்களில் நுகர்வோர் மன்றங்கள் சிறப்பான முறையில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

நிதி உதவி

நுகர்வோர் நலநிதியில் இருந்து ஆண்டு ஒன்றிற்கு ரூபாய் 10,000 ஒவ்வொரு நுகர்வோர் மன்றத்திற்கும் நிதி உதவியாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை வழங்குகிறது. இதில் 20% தொகை (ரூபாய் 2000) மன்ற ஒருங்கிணைப்பு நிறுவனத்திற்கு (பயிற்சி மற்றும் வழி நடத்தலுக்காக) சேவை செலவினமாக வழங்கிட வேண்டும்.

சிறந்த நுகர்வோர் மன்றத்திற்கான பரிசுகள்

மாவட்ட அளவிலான பரிசுகள்: ஒரு மாவட்டத்தில் செயல்படும் சிறந்த நுகர்வோர் மன்றங்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 3000, இரண்டாவது பரிசாக ரூபாய் 2000, மூன்றாவது பரிசாக ரூபாய் 1000 வழங்கப்படும்.

மாநில அளவில் பரிசுகள்: ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் பரிசு பெறும் நுகர்வோர் மன்றம் மாநில அளவிலான குழுவிற்கு அனுப்பப்படும். மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று குழுக்களுக்கு ரூபாய் 5000, ரூபாய் 4000, ரூபாய் 3000 பரிசாக வழங்கப்படும்.

தேசிய அளவில் பரிசுகள்: நாட்டின் சிறந்த நுகர்வோர் மன்றத்திற்குப் பரிசு தொகையாக ரூபாய் 5000 மத்திய அரசால் வழங்கப்படும் . மத்திய அரசின் நுகர்வோர் துறையால் வழங்கப்படும் நிதி, மன்றம் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வழங்கப்பட மாட்டாது. அதனால் மன்றங்கள் யாவும் சுயசார்பு தன்மையடைய ,தகுந்த நடவடிக்கைகளை உரிய நேரத்தில் முன்கூட்டியே எடுத்திட வேண்டும்.

நாட்டில் சாதாரண குடிமகன் முதல் குடியரசுத் தலைவர் வரை அனைவரும் நுகர்வோர்தான். சந்தைப்படுத்தப்படும் ஒரு பொருளையோ அல்லது சேவையோ விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துபவர் நுகர்வோர் ஆவர். ரால்ப் நாடார் என்பவரே இந்த இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர்தான் முதன் முதலில் இந்த இயக்கத்திற்கு வித்திட்டவர். இன்றைய உலகில் எங்கும் எதிலும் கலப்படம், சுரண்டல், ஊழல், ஏமாற்று மோசடிகள் போன்ற செயல்கள்தான் தினந்தோறும் நிகழ்கின்றன. எனவே, நுகர்வோர் ஆகிய நாம்தான் விழிப்புடன் இருந்து, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

நுகர்வோர் இயக்கம் மேற்குலகில் வடிவம் பெற்றது. அமெரிக்காவில் இந்த இயக்கம் ரால்ப் நாடர் மற்றும் ரேச்சல் கார்சன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ரால்ப் நாடர் அரசியல் ஆர்வலர், எழுத்தாளர், வழக்கறிஞர் மேலும் குடியரசு தலைவர் தேர்தலில் பலமுறை போட்டியிட்டவர், முதன்முதலில் நுகர்வோர் இயக்கத்திற்கு வித்திட்டவர் .எனவே அவரே “நுகர்வோர் இயக்கத்தின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.

அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி அமெரிக்க மக்கள் பயன்பெறும் பொருட்டு 1962 ஆம் ஆண்டு மார்ச் 15-இல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றினார். இதுவே உலக நுகர்வோர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுகுறித்து பல ஆண்டுகள் பேசப்பட்ட பின் 1986 இல் டிசம்பர் 24 ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்தது. இந்த அடிப்படையில் தான் ஆண்டுதோறும் டிசம்பர் 24 ஆம் தேதி தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

அதற்கு பயிற்சி தரும் பாசறைகளாகத் திகழ்வதுதான் இந்த நுகர்வோர் மன்றங்கள். இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் நுகர்வோர் மன்றங்களின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துவோம். விழிப்புணர்வு மிக்க நுகர்வோர்களை உருவாக்குவோம்!

The post நுகர்வோர் மன்றத்தின் நோக்கமும் செயல்பாடுகளும்! appeared first on Dinakaran.

Read Entire Article