நீலகிரியில் விடுதி, ரிசார்ட்டுகளுக்கு இ-பாஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

1 week ago 1

மேட்டுப்பாளையம் : தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை தணிக்க குளுகுளு பிரதேசமான ஊட்டியை நோக்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலைகளின் அரசியான ஊட்டியை நோக்கி படையெடுத்து செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஊட்டியில் அதிகரிக்கும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு சுற்றுலா செல்லும் பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் உணவு பண்டங்களின் பிளாஸ்டிக் கவர்களை வீசி செல்லும் நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லாறு சோதனைச்சாவடியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அனைத்து வாகனங்களிலும் ஆவணங்கள் உள்ளதா? பதிவு செய்யப்பட்டுள்ளதா? என காவல்துறை, வருவாய்த்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கோடை சீசன் துவங்கி உள்ளதால் கடந்த ஏப்ரல் 1 முதல் வரும் ஜூன் 30ம் தேதி வரை இச்சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை நாளொன்றுக்கு 6,000 வாகனங்களும், வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 8,000 வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் கல்லாறு சோதனைச்சாவடியில் இ-பாஸ் சோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் பெறாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு சோதனைச்சாவடியிலேயே வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினரும் ஸ்பாட்டிலேயே இ-பாஸ் பெற உதவி வருகின்றனர்.

இதுகுறித்து சோதனைச்சாவடி ஊழியர்கள் கூறுகையில், ‘வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முன்னதாகவே தங்கும் விடுதிகள் அல்லது ரிசார்ட்டுகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் சோதனைச்சாவடி ஊழியர்களுடன் இதுகுறித்து தங்களுக்கு தெரியவில்லை என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நீலகிரியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை அழைத்து அவர்களுக்கு இ-பாஸ் குறித்த விளக்கம் அளிப்பதுடன், முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு முன் கூட்டியே இ-பாஸ் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது, தான் அவர்களும் முறையாக வரும் போதே இ-பாஸ் பெற்று வருவர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

The post நீலகிரியில் விடுதி, ரிசார்ட்டுகளுக்கு இ-பாஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article